எலெக்ஷன் முடிஞ்சது! பெட்ரோல், டீசல் விலை உயருமா?! ட்விஸ்ட் வைத்த மத்திய அரசு!
'தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கு பின், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும்' என வெளியான தகவலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மறுத்து உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தியை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உறுதியாக மறுத்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு விலை உயரும் என்ற பரபரப்பு தகவலுக்கு மத்திய அரசு தெளிவான மறுப்பு தெரிவித்திருப்பது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் முடிவடைந்தது. மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், “தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும்” என்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
இந்த தகவலுக்கு உடனடியாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என்ற செய்திகள் தவறானவை. அத்தகைய எந்த திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இது போன்ற செய்திகள் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!
அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: “கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா மட்டுமே. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தாலும், நாட்டு மக்களை பாதுகாக்க மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. பணவீக்க அழுத்தங்களில் இருந்து நுகர்வோரை காப்பாற்ற, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களை எண்ணெய் நிறுவனங்கள் உள்வாங்கி, சில்லரை விலையை நிலையாக வைத்துள்ளன” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“சமூக ஊடகங்களில் பரவும் சரிபார்க்கப்படாத தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம். இது போலியான செய்தி. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை” என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தல் காலத்தில் இத்தகைய வதந்திகள் அடிக்கடி பரவுவது வழக்கம். இந்த முறையும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், விலை உயர்வு தகவல் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது. மத்திய அரசின் உறுதியான மறுப்பு இப்போது அந்த அச்சத்தை போக்கியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலையாக இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக, தினசரி பயணம் மற்றும் போக்குவரத்துக்கு இந்த விலைகள் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரசின் இந்த தெளிவான நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
இதையும் படிங்க: 8 முறை தொடர் வெற்றி! மீண்டும் தொடருமா? 9வது முறையாக கோபியில் களம் காணும் செங்கோட்டையன்!