நாளை பட்ஜெட்: PF, EPFO கணக்கு வெச்சிருக்கீங்களா..?? வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்..!!
2026 பட்ஜெட்டில் பிஎஃப் சம்பள உச்சவரம்பு, ஓய்வூதியத் தொகையை உயர்த்தி, தனியார் துறை ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனியார் துறை ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கோடிக்கணக்கான EPF (ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி) சந்தாதாரர்கள் இதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
தற்போதைய சூழலில், ஊழியர்களின் கையில் அதிக பணம் சேரும் வகையில் வரி சலுகைகள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் கணிசமான மாற்றங்கள் வரக்கூடும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் PF பங்களிப்புக்கு வட்டி வரி விதிக்கப்படும் தற்போதைய விதியை மாற்றி, அந்த வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்துவது குறித்து அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
இதன்மூலம், அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் நீண்டகால சேமிப்புக்கு வரி சுமை குறையும். மேலும், வேலை மாறும் ஊழியர்களுக்கு வரி விலக்கு பெறுவதற்கான ஐந்தாண்டு கால வரம்பை மூன்றாண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இது ஊழியர்களின் நிதி சுதந்திரத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: 2026 பத்ம விருதுகள் பட்டியல் வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 10 சாதனையாளர்களுக்குப் பத்ம விருதுகள்!
அதேபோல், ஊழியர்கள் பென்ஷன் திட்டம் (EPS) கீழ் குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.15,000இலிருந்து ரூ.21,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் லட்சக்கணக்கான புதிய ஊழியர்கள் சமூக பாதுகாப்பு வலையில் இணைக்கப்படுவர். கடந்த 11 ஆண்டுகளாக மாற்றமின்றி ரூ.1,000ஆக இருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.5,000ஆக உயர்த்த வேண்டும் என்ற ஓய்வூதியர்களின் முக்கிய கோரிக்கைக்கும் இந்த பட்ஜெட்டில் விடை கிடைக்கலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
EPFO திட்டத்தின் கட்டாய சம்பள உச்சவரம்பை ரூ.15,000இலிருந்து ரூ.25,000ஆக உயர்த்துவது குறித்தும் தீவிர பரிசீலனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014இல் ரூ.6,500இலிருந்து ரூ.15,000ஆக உயர்த்தப்பட்ட இந்த வரம்பு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய அளவில் மாற்றம் பெறலாம். இதனால் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களும் கட்டாயமாக PF திட்டத்தில் இணைக்கப்படுவர். இது அவர்களுக்கு ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை வலுப்படுத்தும்.
இருப்பினும், இந்த வரம்பு உயர்வால் ஊழியர்களின் நிகர சம்பளத்தில் சிறிது குறைவு ஏற்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. குறிப்பாக நடுத்தர மற்றும் அடித்தட்டு ஊழியர்களின் அன்றாட செலவுகளை பாதிக்கும் என்ற அச்சம் உள்ளது. ஆனால், நீண்டகாலத்தில் இது வலுவான மறைமுக சேமிப்பாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவசர தேவைகள், மருத்துவ செலவுகளுக்கு இந்த சேமிப்பு பெரிதும் உதவும். இத்தகைய மாற்றங்கள் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பலப்படுத்தும் என்றாலும், நாளை பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட், "இந்த அநீதியை அனுமதிக்க முடியாது” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!