×
 

விமான விபத்தில் அஜித் பவார் மரணம்..!! வெளியான பகீர் சிசிடிவி..!! 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், பாராமதி அருகே இன்று (ஜனவரி 28, 2026) காலை ஏற்பட்ட கோர விமான விபத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். சிறிய ரக தனியார் விமானத்தில் (Learjet 45XR) பயணித்த அவர், மாவட்டத்தில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானம் உடனடியாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த சம்பவம் காலை 8.45 மணியளவில் நடந்ததாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

விபத்தில் அஜித் பவார், அவரது இரண்டு பாதுகாவலர்கள் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து ஆழமான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "மகாராஷ்டிராவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!" - அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

இந்நிலையில் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி வெடித்து சிதறும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகவும் எரிந்த நிலையில் இருந்ததால், கைக்கடிகாரம், ஆபரணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களை வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளது. 

https://x.com/i/status/2016424059756781729

அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துயரச் சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில், “இந்த விமான விபத்து குறித்து முறையான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அஜித் பவாரின் உயிரிழப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசு 3 நாட்கள் துக்க நாட்களாக அறிவித்துள்ளது. இன்று (28-ஆம் தேதி) முதல் வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், இன்று மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 3 நாட்களுக்கு அரசு சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் நீண்டகாலமாக மாநில அரசியலில் முக்கிய பங்காற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “அஜித் பவார் மறைவு: தேசமே கண்ணீர் அஞ்சலி!” - மராட்டியத் துணை முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் உருக்கமான இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share