ஒவ்வொரு வாக்கும் முக்கியம்! கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
ஜனநாயக திருவிழாவில் இளைஞர்களும் பெண்களும் பெருமளவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு.
இன்று காலை கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி வாக்காளர்களுக்குப் பிரதமர் விடுத்துள்ள செய்தியில் புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்களும், பெண்களும் இந்தத் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரள மக்களுக்குப் பிரதமர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் விடுத்துள்ள செய்தியில் 2026 சட்டசபைத் தேர்தலில் கேரளா மக்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களின் இந்த மாபெரும் பங்கேற்பு கேரளாவின் ஜனநாயக உணர்விற்குப் புதிய ஆற்றலைத் தரும். மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நான் தோற்கவில்லை, மக்கள் தான் தோற்றீர்கள்! திருவொற்றியூரில் நாம் தமிழர் சீமான் ஆவேசம்!
அசாம் மாநில வாக்காளர்களுக்குப் பிரதமர் அசாமி மற்றும் ஆங்கிலத்தில் விடுத்துள்ள செய்தியில் அசாம் சட்டசபைத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தேர்தலை ஒரு ஜனநாயகத் திருவிழாவாகவும், குடிமைப் பணியாகவும் மாற்றுவதில் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. கேரளாவில் 140 தொகுதிகளிலும் அசாமில் 126 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 30 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள், வாக்காளர்களிடையே விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஜனநாயக திருவிழா! புதுச்சேரி, கேரளா மற்றும் அசாமில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடக்கம்!