×
 

மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழல், இந்தியாவின் எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.

சுமார் நான்கு வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போரினால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள டீம் இந்தியா உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் தற்போது 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் ஒரு மாதத்திற்குத் தேவையான எல்பிஜி இருப்பு உள்ளதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இதையும் படிங்க: ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையிலும், சில்லறை விற்பனை விலையேற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு ₹10 வரை மத்திய அரசு குறைத்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள இந்தியக் கப்பல்களைப் பாதுகாப்பாக மீட்பது மற்றும் மாற்று வழித்தடங்கள் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அந்த மாநில முதல்வர்கள் இந்தப் பிரதமருடனான அதிகாரப்பூர்வ ஆலோசனையில் பங்கேற்கவில்லை.

இருப்பினும், இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அமைச்சரவைச் செயலகம் மூலமாக அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர்களுடன் தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எங்களுக்கு யாரும் தேவையில்லை! ஹார்முஸ் விவகாரத்தில் நேட்டோ நாடுகளை சாடிய டொனால்ட் டிரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share