கிரிக்கெட் தான் நம்ம மொழி!! செயல்பாடு டெஸ்ட் போட்டி! முடிவுகள் டி20! ஆஸ்திரேலியாவில் மோடி அசத்தல் ஸ்பீச்!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவு மற்றும் செயல்பாட்டை கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா உறவை கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இரு நாட்டு தொழில் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உற்பத்தி, எரிசக்தி, உள்கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியர்களுக்கு அழைப்பு விடுத்தார். நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய பிரதமர்!! இதுதான் காரணம்?! பொடி வைத்த மோடி!
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் பலம் மக்கள் இடையிலான தொடர்புகள்தான் என்று கூறிய மோடி, இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்வதாகப் பாராட்டினார்.
இந்திய மாணவர்கள் விரும்பும் கல்வி நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்கள் தொடங்குவது இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம் என்றார்.
கிரிக்கெட்டை உறவின் மொழியாகக் குறிப்பிட்ட பிரதமர், “நமது உறவின் நோக்கங்கள் ஒரு நாள் போட்டி போன்றவை. முடிவுகள் டி20 போல வேகமானவை. நமது ஒத்துழைப்பு டெஸ்ட் போட்டி போல ஆழமானது” என்று அழகாக ஒப்பிட்டுப் பேசினார். வரும் ஆண்டுகளில் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் இரு நாடுகளிலும் நடைபெற உள்ளதால் விளையாட்டு ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டாக மாறும்” என்று பேசினார். அதற்கு பிரதமர் மோடி, “ஒன்றும் ஒன்றும் அருகருகே நின்றால் பதினொன்றாக மாறும்” என்று பதிலளித்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
இந்த உரை இந்தியா - ஆஸ்திரேலியா உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேநீர் விற்றவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்தது இந்திய ஜனநாயகம்! பிரதமர் மோடி உருக்கம்!