100 ஆண்டு கால காயம், வலி! இன்று குணமானது!! அயோத்தியில் பறக்கும் காவிக்கொடி!! பிரதமர் மோடி உருக்கம்!
அயோத்தி ராமர் கோவில் முழுமையாக கட்டி முடித்த நிலையில், கோவில் கோபுர உச்சியில் 30 அடி உயர் கொடிமரத்தில் புனித காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.
அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானம் முழுமையடைந்ததன் அடையாளமாக, இன்று (நவம்பர் 25) பிரதமர் நரேந்திர மோடி, கோயிலின் 161 அடி உயர கோபுர உச்சியில் 30 அடி உயர கொடிமரத்தில் புனித காவிக் கொடியை ஏற்றி வைத்தார். ‘தர்ம துவஜாரோஹணம்’ என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நிகழ்வு, காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்தத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ராமரின் சூரிய குலத்தை குறிக்கும் சூரிய சின்னம், மையத்தில் ஓம் எழுத்து, தேவ மரமான கோவிதாரா (மந்தாரம் மற்றும் பாரிஜாதம் இணைந்தது) போன்ற புனித சின்னங்கள் பொறிக்கப்பட்ட இந்தக் கொடி, தர்மத்தின் வெற்றியையும், ராம ராஜ்ஜியத்தின் இலட்சியத்தையும் குறிக்கிறது.
விழாவுக்கு முன்பு அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பூகொத்து கொடுத்து வரவேற்றார். ராமர் கோயில் செல்லும் பாதையில் நடத்திய ரோடு ஷோவில், சாலை இரு புறமும் திரண்ட ஏராளமான பக்தர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: அயோத்தியில் பறக்கிறது ராம ராஜ்ஜியத்தின் கொடி!! அசோக் சின்ஹாலின் ஆத்மா சாந்தியடையும்!! யோகி உருக்கம்!
கோயிலை அடைந்த மோடி, யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருடன் சிறப்பு வழிபாடு நடத்தினார். கொடி ஏற்றிய சமயம் சங்கு ஊதப்பட்டு, பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் எழுப்பினர். கொடி பறக்கும் பார்வையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்தார்.
கொடி ஏற்றிய பிறகு பேசிய பிரதமர் மோடி, “2047-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாம் ஒரு வளர்ந்த இந்தியாவை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். “நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்” என்றும், “இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் ராமர் கோயில் கட்டுமானத்தில் உதவிய அனைத்து ராமர் பக்தர்களையும் நான் வாழ்த்துகிறேன்” என்றும் கூறினார்.
“பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்” என்றும், “அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வைக் காண்கிறது. முழு நாடும், உலகமும் ராமரில் மூழ்கியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். “100 ஆண்டுகளின் காயங்களும் வலிகளும் இன்று குணமடைகின்றன. 500 ஆண்டுகால உறுதிமொழி நிறைவேறி வருகிறது” என்றும் பிரதமர் மோடி உரையில் கூறினார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “உ.பி. மக்கள் மற்றும் ராம பக்தர்கள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். அயோத்தி ராமர் கோயில் 140 கோடி இந்தியர்களின் கவுரவம். இந்தக் கோயில் அமைவதற்காக பாடுபட்ட அனைவரையும் வணங்குகிறேன். நாட்டின் கோடான கோடி மக்களின் விருப்பத்தை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார்.
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலட்சியத்தின் எடுத்துக்காட்டு இது. கடந்த 11 ஆண்டுகளில் நாட்டு மக்கள் பல நலத்திட்டங்களால் பலன் அடைந்துள்ளனர். பல்வேறு தடைகளை உடைத்து அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ஏர்போர்ட் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியை புதிய ஸ்மார்ட் சிட்டியாக மாற்றிக் காட்டியவர் பிரதமர் மோடி. இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்தது” என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஏராளமான பக்தர்களின் கனவு மெய்ப்பட்ட நாள் இது. அசோக் சிங்காலின் ஆத்மா இன்று சாந்தியடையும். இந்தக் கோயிலுக்காக ஏராளமானோர் உயிர் நீத்தனர். அயோத்தியில் இன்று ராம ராஜ்ஜியத்தின் கொடி பறக்கிறது. இங்கு தர்மத்தின் கொடி பறக்கிறது. மந்தாரம், பாரிஜாத மரங்கள் இணைந்த கோவிதாரா மரம் கொடியில் இடம்பெற்றுள்ளது. இவை இரண்டும் தேவ மரங்களாக கருதப்படுகின்றன.
இந்தக் கொடியில் சூரியனும் இடம்பெற்றுள்ளது. அயோத்தி கோயிலில் சாஸ்திர நடைமுறை இன்று நிறைவடைந்துள்ளது. பாரதத்தின் வளர்ச்சிக்கான பயணம் தொடங்கிவிட்டது. உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பாரதத்தை உருவாக்க வேண்டும். அயோத்தி ராமர் கோயில் மிக அழகாகவும், பிரமாண்டமாகவும் அமைந்துள்ளது” என்று உருக்கமாகப் பேசினார்.
இந்த விழா, ராமர் கோயிலின் சாஸ்திர நடைமுறைகள் முழுமையடைந்ததன் அடையாளமாகவும், இந்தியாவின் சமய பாரம்பரிய மறுமலர்ச்சியின் மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. பல்லாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, உலகம் முழுவதும் நேரலையாகப் பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: Breaking! அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடி! மக்கள் வெள்ளத்தில் மோடி!! உ.பி-யில் விழாக்கோலம்!!