×
 

பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்..!! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டம்..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 25, 2026) இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவருடைய இஸ்ரேலுக்கு இரண்டாவது பயணமாகும். முந்தைய பயணம் ஜூலை 2017-ல் நடைபெற்றது, அப்போது அவர் இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்தியப் பிரதமராக வரலாற்று சாதனை படைத்தார்.

இப்பயணத்தின் முக்கிய நோக்கம் இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும். பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விரிவான விவாதங்கள் நடத்த உள்ளார். 

பாதுகாப்பு, பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதுமை, விவசாயம், நீர் மேலாண்மை, வர்த்தகம், மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மார்ச்சில் மட்டுமே 3 முறையாம்..!! தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! பக்கா பிளான்..!!

இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவு கடந்த சில ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தப் பயணம் அந்த உறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அரங்கில் நிலவும் முக்கிய விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

இன்றைய நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்துப் பேச உள்ளார். அதே தினத்தில், பிரதமர் நெதன்யாகுவுடன் தனிப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொள்வதுடன், இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெட்டில் (Knesset) உரையாற்றவுள்ளார். இது ஒரு இந்தியப் பிரதமரின் முதல் க்னெசெட் உரையாகும், இது இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கத்தை குறிக்கும் முக்கிய நிகழ்வு.

நாளை (பிப்ரவரி 26), இரு பிரதமர்களும் இருதரப்பு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள். பிரதமர் மோடி ஹோலோகாஸ்ட் நினைவிடமான யாட் வாஷெமை (Yad Vashem) பார்வையிட உள்ளார். இஸ்ரேலில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு நடத்துவதுடன், தொழில்நுட்பம் மற்றும் புதுமை தொடர்பான கண்காட்சியையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணம் நடைபெறும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் சூழல் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள் காரணமாக, எப்போது வேண்டுமானாலும் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில்தான் பிரதமர் மோடியின் இப்பயணம் நடைபெறுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஆழமான உறவு கொண்டுள்ளன. இந்தப் பயணத்தின் மூலம் பாதுகாப்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இஸ்ரேலுடனான உறவு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அரசுமுறைப் பயணம் இந்தியா-இஸ்ரேல் உறவுகளுக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அதுவும் 2 முறை..!! ஆப்சென்டாகும் அண்ணாமலை..!! அரசியலில் நடக்கும் மாற்றம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share