சிக்கிம் மாநிலம் உருவான 50ம் ஆண்டு விழா.. பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட மோடி.. காரணம் இதுதான்?
50 ஆண்டுகளுக்கு முன் சிக்கிம் இந்தியாவுடன் வெறும் பூகோள ரீதியிலான பிணைப்பை மட்டும் பெறவில்லை. இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது என பிரதமர் மோடி கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலம் உருவான 50ம் ஆண்டு விழாவை ஒட்டி, காங்டாக்கில் பிரமாண்ட அரசு விழா நடந்தது. முதல்வர் பிரேம் சிங் தமாங், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் இந்த வண்ணமிகு விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக இருந்தது. டில்லியில் இருந்து கிளம்பி மேற்கு வங்கம் வரை சென்ற மோடியின் விமானம், மோசமான வானிலை காரணமாக சிக்கிம் செல்ல முடியாமல் போனது.
இதையடுத்து, மேற்கு வங்கத்தின் பக்தோக்ராவில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம், பிரதமர் மோடி சிக்கிம் மாநில பொன்விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த மோடி, சிக்கிமுக்கு நேரில் வர முடியாததற்கு சிக்கிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
இதையும் படிங்க: மோதி பார்த்துக்கலாம் வர்றீங்களா? நேரலை டிவி விவாதத்திற்கு மோடியை அழைக்கும் மம்தா..
சிக்கிம் இந்திய மாநிலங்களில் ஒன்றாக உருவாகி 50 ஆண்டுகள் ஆகிறது. சிக்கிம் மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க முடிவெடுத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து நெருங்கிய தொடர்பில் இல்லை. 2014க்கு பின், மத்தியில் ஆளும் பாஜ அரசு ஆக்ட் ஈஸ்ட் பாலிசியை பின்பற்ற துவங்கியதால், சிக்கிம் உள்ளிட்ட அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கின்றன.
சிக்கமில் மட்டும் 500 கிமீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 100 கிமீ புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கத்திலும் சிக்கிம், மேற்கு வங்கம் இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சிக்கிம் நெருங்கிய தொடர்பை ஏற்படுதிக்கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் டில்லியில் நார்த் ஈஸ்ட் சம்மிட் நடந்தது. அதில் வட கிழக்கு மாநிலங்களில் முதலீடுகள் குவிந்தன. பல நிறுவனங்கள் சிக்கிம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் தொழில், வர்த்தகத்திற்காக முதலீடு செய்துள்ளன.
50 ஆண்டுகளுக்கு முன் சிக்கிம் இந்தியாவுடன் வெறும் பூகோள ரீதியிலான பிணைப்பை மட்டும் பெறவில்லை. இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. தற்போது வேளாண் பொருள் உற்பத்தியில் சிக்கிம் மிகச் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. 100 சதவீத இயற்கை விவசாயம் செய்து, நாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நாட்டில் அதிக தனிநபர் வருமானம் உள்ள மாநிலங்களில், சிக்கிம் முன்னிலை வகிக்கிறது. வடகிழக்கின் வளர்ச்சியை தடுக்கும் மதில் சுவராக டில்லி விளங்கியது. தற்போது வடகிழக்கின் வளர்ச்சிக்கான கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. தாெழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த நேரத்தில் சிக்கிம் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. சிக்கிம் மக்களுடன் இந்த நேரத்தில் இருக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. மோசமான வானிலை காரணமாக சிக்கிம் வர முடியாததற்காக மாநில மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நிச்சயம் இன்னொரு தருணத்தில் சிக்கிமுக்கு வந்து, மாநிலம் உதயமான திருவிழாவில் பங்கேற்பேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு நாணயம், தபால் தலை ஆகியவை வெளியிடப்பட்டன. கவர்னர் ஓம் பிரகாஷ் மாதுர் இவற்றை வெளியிட்டார். பிரதமர் மோடியின் வருகைக்காக சிக்கிம் மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் கூறினார்.
இதையும் படிங்க: இனி சிலிண்டர் தேவையே இல்லை! பிரதமர் மோடி துவங்கி வைத்த அட்டகாசமான திட்டம்.!