துணிச்சலுடன் விமானத்தை காப்பாற்றிய இந்திய பைலட்.. வீடியோ காலில் பேசிய பிரதமர் மோடி..!! உருக்கமான வார்த்தைகள்..!!
துணை விமானி இப்போது கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்; அவரது விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃப்ளைதுபாய் போயிங் 737 விமானத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம், ஒரு இந்திய விமானியின் அசாதாரண தைரியத்தை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென கத்தியால் கேப்டன் சுமித் மச்சாரைத் தாக்கினார்.
விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் நோக்கத்துடன் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் இந்தத் தாக்குதலால், கேப்டன் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கினார். விமானம் வெறும் 30 விநாடிகளில் சுமார் 14,000 அடி உயரம் சரிந்தது. காயங்களால் அவதிப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தபோதும், கேப்டன் சுமித் மச்சார் தனது கடைசி சக்தியைத் திரட்டி காக்பிட் கதவைத் திறந்தார். அசாதாரண சத்தங்களைக் கேட்ட பயணிகளும் விமானக் குழுவினரும் உடனடியாக உள்ளே நுழைந்து துணை விமானியைக் கட்டுப்படுத்தினர்.
பின்னர் விமானத்தில் இருந்த இரு ஓய்வு விமானிகள், சவுதி அரேபியாவின் தபுக் நகரில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். இதனால் அனைத்துப் பயணிகளின் உயிரும் காப்பாற்றப்பட்டது. துணை விமானி இப்போது கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்; அவரது விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: 180 உயிர்களை காத்து... ஓவர் நைட்டில் ஹீரோவான இந்திய விமானி... பிரதமர் மோடி கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!
இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் சுமித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பு மூலம் பேசினார். சம்பவத்தை நினைவுகூர்ந்த சுமித் உணர்ச்சிவசப்பட்டு, “எனக்கு உடலில் பலத்த காயங்கள் இருந்தன. ஆனால் எப்படியாவது எழுந்து காக்பிட் கதவைத் திறக்க வேண்டும் என்பதே என் மனதில் இருந்தது. காயம் மோசமாக இருந்தாலும் பயணிகளைப் பாதுகாப்பதே என் நோக்கம்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி அவரைப் பாராட்டி, “நீங்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தபோதும், உங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பயணிகளின் பாதுகாப்பையே முதன்மையாகக் கருதினீர்கள். உங்கள் துணிச்சல் 140 கோடி இந்தியர்களின் மரியாதையை உயர்த்தியுள்ளது. இந்தியா உங்களை ஆவலுடன் வரவேற்கக் காத்திருக்கிறது. நேற்று நாடு முழுவதும் உங்கள் உடல்நலத்துக்காக சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. உங்களுக்கு எப்போது என்ன உதவி தேவைப்பட்டாலும் ஒரு அழைப்பு போதும்” என்று உறுதியளித்தார்.
https://twitter.com/i/status/2105931116058411146
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கு நன்றி தெரிவித்த அவர், சுமித்தின் செயல் அகிம்சையின் உண்மையான பொருளை உலகுக்குக் காட்டியதாகவும் குறிப்பிட்டார். கேப்டன் சுமித் மச்சார் விரைவில் குணமடைந்து நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம், ஆபத்தான சூழலிலும் மனித உயிர்களைக் காப்பாற்றும் ஒரு விமானியின் தன்னலமற்ற தைரியத்தை எடுத்துக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: ஜி20 உச்சி மாநாடு.. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி..!! டிரம்பை சந்திக்க திட்டம்!!