நேபாள இடைக்கால பிரதமருக்கு ஃபோன் போட்ட பிரதமர் மோடி.. ஓ..!! இதுதான் விஷயமா..!!
நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.
நேபாளத்தில் அரசு விதித்த சமூக ஊடகத் தடையை எதிர்த்து தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல நகரங்களில் இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் கடுமையான கலவரமாக உருவெடுத்தது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை, உள்நாட்டு சட்டங்களை மீறியதாகக் கூறி, அரசு தடை செய்தது. இதற்கு எதிராக ஜென்-இசட் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டனர். ஊழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மற்றும் அரசின் சர்வாதிகார அணுகுமுறைக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பினர்.
செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், காவல்துறையினர் கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள், மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர், மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அரசு தடையை நீக்கிய போதிலும், மக்களின் கோபம் தணியவில்லை. நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டு, சிலவற்றுக்கு தீ வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே மோடி.. மனதார வாழ்த்திய இத்தாலி பிரதமர் மெலோனி..!!
இதில், முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீயில் அவரது மனைவி ராஜ்யலட்சுமி உயிரிழந்தார். காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டதோடு, நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகமும் எரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்த்து ராணுவம் பாதுகாப்பு பணியில் இறங்கி, ஊரடங்கை அமல்படுத்தியதையடுத்து நேபாளம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனிடையே அரசியல் நெருக்கடி மற்றும் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக, பிரதமர் கே.பி. சர்மா ஒலியும், குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடலும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும்வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. போராட்டக் குழுவினருடனான ஆன்லைன் பேச்சுவார்த்தையில், 73 வயதான சுசிலா கார்கி இடைக்கால தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக 2016-2017இல் பதவி வகித்து வரலாறு படைத்தவர் இவர். ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற இவர், நாட்டின் நலனுக்காக இப்பொறுப்பை ஏற்பதாகவும், ஆறு மாதங்கள் மட்டுமே பணியில் நீடிப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது நேபாள அரசை எதிர்த்து போராடி உயிரிழந்த இளைஞர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். நேபாள தேசிய தினத்தை ஒட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வரும் 22ம் தேதி திரிபுரா செல்கிறார் பிரதமர் மோடி.. காரணம் இதுதான்..!!