×
 

லோக்சபாவில் இன்று 10 மணி நேர விவாதம்! மோடி மாஸ்டர் ஸ்ட்ரோக்! அனல் பறக்கப் போவது கன்பார்ம்!

லோக்சபாவில் இன்று (டிசம்பர் 08) வந்தே மாதரம் பாடல் 150வது ஆணடு நிறைவு குறித்து 10 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.

டெல்லி: இந்தியாவின் தேசியப் பாடலான “வந்தே மாதரம்”யின் 150ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, லோக்சபாவில் இன்று (டிசம்பர் 8) 10 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உரையாற்ற உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 அன்று தொடங்கி 19 வரை நடைபெறுகிறது. இதில் 14-க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இரு அவைகளிலும் விவாதங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.

“வந்தே மாதரம்” பாடல், 1875 நவம்பர் 7 அன்று பங்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்களால் “பங்கதர்ஷன்” இதழில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. 1882-ல் அவரது “ஆனந்தமத்” நாவலில் இணைக்கப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்த இந்தப் பாடல், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. “தாய் மேல் வணக்கம்” என்று பொருள்படும் இந்தப் பாடல், இந்தியாவின் கலாச்சார, அரசியல், சமூக விழிப்புணர்வின் சின்னமாக உள்ளது. 

நவம்பர் 7 அன்று பிரதமர் மோடி தலைநகரில் இந்த 150ஆம் ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கினார். அப்போது “வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை இல்லை… அது மந்திரம், ஆற்றல், கனவு, உறுதிமொழி” என்று கூறினார்.

இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு! நாளை பார்லி.,யில் சிறப்பு விவாதம்! பிரதமர் மோடி உரை!

லோக்சபாவில் மதியம் 12 மணிக்கு தொடங்கும் விவாதம், 10 மணி நேரம் நீடிக்கும். பாஜக எம்.பி.க்களுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி விவாதத்தைத் தொடங்கி பேசுவார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது பேச்சாளராக இருப்பார். காங்கிரஸ் தரப்பில் கவுரவ் கோகாய், பிரியங்கா காந்தி வத்ரா, தீபேந்தர் ஹூடா, பிமோல் அகோய்ஜம், பிரணிதி சிந்தே உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் பேச உள்ளனர். 

இது பிரியங்கா காந்தியின் லோக்சபாவில் முதல் உரையாக இருப்பதால் கூடுதல் கவனம் பெறும். விவாதத்தில் பாடலின் வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு, இன்றைய இளைஞர்களுக்கு அதன் பொருள் என பல்வேறு கோணங்களில் பேசப்படும். பல முக்கியமான, குறைவாகத் தெரிந்த வரலாற்று உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்ய சபாவில் நாளை (டிசம்பர் 9) இதே விவாதம் நடைபெறும். உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்தைத் தொடங்குவார். மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா இரண்டாவது பேச்சாளராக இருப்பார். இந்த விவாதங்கள், பாடலின் 150ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் பகுதி. இளைஞர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், மசோதாக்களுக்கான விவாதங்களுடன் இணைந்து இந்த சிறப்பு விவாதம் நடைபெறுவதால், அனல் பறக்கும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் இந்த விவாதத்தை மக்கள் ஆர்வமுடன் பார்க்கும் என்பது உறுதி.
 

இதையும் படிங்க: ‘வந்தே மாதரம்’ 150! பார்லி.,யில் ஒருநாள் முழுக்க விவாதம்! எதிர்க்கட்சிகளை மடக்க மோடி ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share