“இந்தியா இப்போ ‘ரீஃபார்ம் எக்ஸ்பிரஸ்’!” உலகமே உற்றுப்பார்க்கும் 2025 டாப் சாதனைகள் - பிரதமர் மோடி பெருமிதம்!
2026-ஆம் புத்தாண்டையொட்டி, கடந்து வந்த 2025-ஆம் ஆண்டில் பாஜக அரசு எட்டியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைத் தொகுத்துப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
“இந்தியா இன்று உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதற்கு நமது மக்களின் புதுமைச் சிந்தனையே காரணம்; நாடு இப்போது ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’ (Reform Express) ரயிலில் ஏறிவிட்டது” எனப் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டை இந்தியாவின் ‘தொடர் தேசிய சீர்திருத்த மிஷன்’ ஆண்டாக வர்ணித்துள்ள பிரதமர், கடந்த 11 ஆண்டுகால உழைப்பின் பலனாகப் பொருளாதாரம், கல்வி, அணுசக்தி மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் இந்தியா கண்டுள்ள அசுர வளர்ச்சியைப் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். சாமானிய மக்களின் கண்ணியமான வாழ்வையும், தொழில்முனைவோரின் தன்னம்பிக்கையையும் உறுதி செய்வதே இந்தச் சீர்திருத்தங்களின் தாரக மந்திரம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
2025-ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியில், மத்திய பாஜக அரசின் ஓராண்டு காலச் சாதனைகளைத் தொகுத்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “நமது நாட்டின் இளைஞர் சக்தியும், மக்கள் கொண்டுள்ள தளராத உறுதியும்தான் இந்த சீர்திருத்த எக்ஸ்பிரஸ் ரயிலின் முதன்மை எஞ்சின்கள்” என அவர் புகழாரம் சூட்டினார். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதையும், 1961-ஆம் ஆண்டின் காலாவதியான சட்டத்திற்குப் பதிலாக ‘வருமான வரிச் சட்டம் 2025’ அறிமுகப்படுத்தப்பட்டதையும் அவர் வரலாற்றுச் சாதனையாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: “திருச்சியில் அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!” - நயினார் யாத்திரை நிறைவு விழாவில் காத்திருக்கும் 'சர்ப்ரைஸ்'!
பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, ஜிஎஸ்டி (GST) முறையில் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளைக் கொண்ட எளிமையான வரிமுறை அமல்படுத்தப்பட்டதன் மூலம் சிறு குறு தொழில்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பயன் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல், காப்பீட்டுத் துறையில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கு (FDI) அனுமதி வழங்கியது மற்றும் செபியின் (SEBI) செயல்பாடுகளை நவீனப்படுத்த ‘பத்திரச் சந்தை குறியீடு மசோதா’ கொண்டு வந்தது போன்றவை இந்தியாவின் முதலீட்டுச் சூழலை மாற்றியமைத்துள்ளன. கடல்சார் வர்த்தகத்தைப் பொறுத்தவரை, ஆங்கிலேயர் காலத்து 1908-ஆம் ஆண்டுச் சட்டங்களை நீக்கிவிட்டு, பருவமழைக் கூட்டத்தொடரில் 5 வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்சார் சட்டங்களை நிறைவேற்றி லாஜிஸ்டிக்ஸ் செலவுகளைக் குறைத்துள்ளதாகப் பிரதமர் பெருமிதத்துடன் பட்டியலிட்டார்.
தொழிலாளர் நலன் மற்றும் ஊரக வேலைவாய்ப்பில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, 29 சிதறிக்கிடந்த தொழிலாளர் சட்டங்களை 4 நவீன குறியீடுகளாக மாற்றியதன் மூலம் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றார். மேலும், ‘விக்சித் பாரத்-G RAM G’ சட்டத்தின் கீழ் ஊரக வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பெருக்கும் எனத் தெரிவித்தார். கல்வித் துறையில் UGC, AICTE போன்ற அமைப்புகளுக்குப் பதிலாக ‘விக்சித் பாரத் கல்வி அதிஷ்டான்’ எனும் ஒற்றை அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக, ‘சாந்தி (SHANTI) சட்டம்’ மூலம் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து, ஏஐ (AI) யுகத்தின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா தயாராகிவிட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், “இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உலக முதலீட்டாளர்கள் இணைந்து கொள்ள இதுவே சரியான தருணம்” என அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: “இந்தியாவின் தீய சக்தி பாஜக தான்! - மதுரையில் SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அதிரடி!