"ஆப்ரேஷன் சிந்தூர் டூ அயோத்தி!" - இந்தியர்களின் சாதனைப் பயணத்தை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!
2025-ஆம் ஆண்டின் இறுதி ‘மன் கி பாத்’ உரையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை சாதனைகளை பிரதமர் மோடி பெருமிதத்துடன் பட்டியலிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு முதல் விண்வெளி சாதனை வரை இந்தியா இந்த ஆண்டில் எட்டியுள்ள மைல்கற்களைப் பட்டியலிட்டு, 2025-ஆம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ இந்தியாவின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளதாகவும், இன்றைய பாரதம் தனது பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதை உலகம் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் அதிரடியாகத் தெரிவித்தார்.
நடப்பாண்டின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனதின் குரல்’ (Mann Ki Baat) வானொலி நிகழ்ச்சி வாயிலாகத் தேச மக்களுக்கு உரையாற்றினார். இந்த ஆண்டின் கடைசி உரை என்பதால், இந்தியாவின் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் ஆன்மீகப் பெருமைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், “இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தேடித்தந்த ஒரு அடையாளமாக மாறியுள்ளது. எல்லையைப் பாதுகாப்பதிலும், எத்தகைய சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்வதிலும் இந்தியா தனது உறுதியை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய பிரதமர், “இன்றைய பாரதம் தனது பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதை உலகம் இப்போது தெளிவாகக் கண்டுள்ளது. நமது ராணுவ வலிமையும், ராஜதந்திர நகர்வுகளும் இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளன” என்றார். மேலும், விண்வெளித் துறையில் இந்தியா படைத்துள்ள சாதனையைப் பாராட்டிய பிரதமர், “சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையைச் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். இது அறிவியல் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அடைந்துள்ள மாபெரும் முன்னேற்றத்தின் அடையாளம்” எனப் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: "இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடும் பாஜக"; பொருநை வரலாறை பாருங்க! பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முதல்வர் அழைப்பு!
ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் குறித்துப் பேசுகையில், “அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றும் விழா, ஒவ்வொரு இந்தியரின் மனதையும் பெருமையால் நிரப்பியது. 2025-ஆம் ஆண்டில் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம் ஆகிய மூன்றும் ஒருங்கே இணைந்து காணப்பட்டன. இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணம் வரும் ஆண்டுகளிலும் தொடரும்” எனப் பிரதமர் மோடி தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார். வரும் 2026-ஆம் ஆண்டு இந்தியாவிற்குப் புதிய வாய்ப்புகளை அள்ளித் தரும் ஆண்டாக அமையும் என வாழ்த்துக் கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: X தளத்தில் Top 10 இடத்தில் மோடி..!! அட..!! இந்த ஃபோட்டோவுக்கு இவ்ளோ லைக்ஸ்-ஆ..!!