×
 

“அது மட்டும் நடந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்” - அன்புமணிக்கு சவால் விட்ட ஜி.கே. மணி...!

அன்புமணி, ராமதாஸ் சொல்வதை கேட்டு இணைந்து செயல்படுகிறேன் என்று கூறி உடன்பாட்டுடன் வந்தால்  நாளைக்கே நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்வேன்

அன்புமணி, ராமதாஸ் சொல்வதை கேட்டு இணைந்து செயல்படுகிறேன் என்று கூறி உடன்பாட்டுடன் வந்தால்  நாளைக்கே நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்வேன், எனக்கு கட்சியினுடைய நன்மை தான் முக்கியம் என பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி தெரிவித்துள்ளார்.

தமிழக முழுவதும் அடுத்த மாதம் 12-ஆம் தேதி உள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக போராட்டம் நடைபெற உள்ளது, இது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்க தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை முடிந்த பாமக கௌரவ தலைவர் ஜி. கே மணி  செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

டிசம்பர் 12-ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைநகர் சென்னையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைநகரங்களிலும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. அந்தப் போராட்டத்தை எப்படி திட்டமிட்டு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்திற்காக தான் இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்துள்ளோம். சமூக நீதியின் தொட்டில் சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு என்று தான் சொல்லிக் கொண்டுள்ளோம்.

இதையும் படிங்க: முக்குலத்தோர் மக்களுக்கு தனி இடஒதுக்கீடு!... தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஜி.கே மணி வலியுறுத்தல்...!

அதில் ஜாதி வாரிய கணக்கீடு தான் சமூக நீதியின் அடித்தளம். அந்த கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தவில்லை என்பது மிகப்பெரிய வேதனையாக உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அதை தட்டிக் கழிக்கிறது, ஜாதி வாரி கணக்கெடுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது, அப்பொழுது தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு அக்கறை இல்லையா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 

10.5% இட ஒதுக்கீடு பொறுத்தவரை உச்ச நீதிமன்றமே சரியான கணக்கெடுக்க நடத்தவில்லை என  தடை விதித்துள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு,
தமிழ்நாட்டில் மதுரை நீதிமன்ற அமர்வு இட ஒதுக்கீடை ரத்து செய்தது, மாநில அரசிற்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு அதிகாரம் இல்லை, ஒரு ஜாதிக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு அதிகாரம் இல்லை போன்ற ஏழு காரணங்களை கூறி ரத்து செய்தது. அப்போது ராமதாஸ் மற்றும் எனது பெயரில் மேல்முறையீடு செய்தோம். தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அந்த மேல்முறையீட்டில் கூட உயர்நீதிமன்றம் கூறிய ஆறு காரணங்களை கூறி தள்ளுபடி செய்து, தரவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற ஒரு காரணத்தை எடுத்துக்கொண்டது. ஆனால் இவ்வளவு காலம் அந்த தரவுகளை தமிழக அரசு சேகரிக்கவில்லை.

 தமிழகத்தில் கல்வியில் வன்னியர்கள் பின்தங்கி இருப்பதற்கு அடையாளம் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடைசியில் வரும் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், வன்னியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்கள் தான். தமிழ்நாட்டில் குடிசை வீடுகளின் எண்ணிக்கைகளை பார்க்கிறோம். அந்த குடிசை வீடுகள் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்கள் கூட வட மாவட்டங்கள் தான். பெரும்பான்மையாக இருக்கக்கூடிய வன்னியர்கள் படிக்காமல் வேலை வாய்ப்பு பெறாமல் முன்னேறாமல் உள்ளனர். இவர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு எப்படி முன்னேறிய மாநிலமாக இருக்க முடியும், வன்னியர்கள் இட ஒதுக்கீடு என்பது தனிப்பட்ட பிரச்சனை இல்லை சமூக நீதி, அனைத்து ஜாதி மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அடித்தளம் என்றார். 

2026 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி சென்று கொண்டுள்ளது என்ற கேள்விக்கு, 2026 காண கூட்டணி பேச்சு வார்த்தையை ராமதாஸ் மிக விரைவில் அறிவிப்பார்கள். அது டிசம்பர் மாதம் இருக்கும், கூட்டணி குறித்து முடிவதற்கு முழு அதிகாரம் கடந்த பொதுக்குழுவில் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வன்னியர் சங்கம் தொடங்கியது ராமதாஸ் தான், பாமக தொடங்கியதும் அவர் தான். எனவே அவர் தலைமையில் தான் போராட்டம் நடத்துகிறோம். அவர்தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததும், அவர்தான் இந்த மக்களுக்கு அடையாளம், இன்னொரு தரப்பு செயல்படுவதற்கு காரணம் பிரிவினை. 

ஜிகே மணி தான் காரணம் என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட பொய் வதந்தியை பரப்புகிறார்கள், இந்த வதந்தியை மக்கள் நம்பக் கூடாது, மருத்துவர் ஐயா அரசியலில் அனுபவம் இல்லாதவரா விவரம் இல்லாதவரா மணி சொன்னால் கேட்பாரா, மருத்துவர் அன்புமணி அப்பாவுடன் வந்து பேசினால் ஜிகே மணி வேண்டாம் என்று சொல்வாரா, ரெண்டு பேரும் சேர்ந்து முடிவெடுத்தால் முடிவெடுத்தது தான் அதை விட்டுவிட்டு அப்பாவித்தனமாக வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள். இப்பொழுது யார் என்று பெயர் சொல்லாமல் தீய சக்திகள் இருப்பதால்தான் நாங்கள் போய் சேரவில்லை என்று கூறுகிறார்கள்.

அன்றைக்கு கூறினேன் அந்த தீய சக்திகள் யார்? என்று கூறினால் அவர்கள் எல்லாம் ராமதாஸிடம் இருந்து விலகிக் கொள்கிறோம். ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் நல்லது என்று கூறினேன். அதற்கு விலக வேண்டாம் ஜி.கே மணியும் அருளும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் போதும் என்று கூறினார்கள். இப்போதும் கூறுகிறேன், ராமதாஸ் சொல்வதை கேட்டு அவருடன் இணைந்து செயல்படுகிறேன் என்று கூறி வந்தால், நல்லது நடக்கிறது என்றால்,  நாளைக்கு நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்வேன்.

எனக்கு கட்சியினுடைய நன்மை தான் முக்கியம். அதற்காக ராஜினாமா செய் என்றால் நிச்சயமாக செய்வேன், இவ்வளவு நாட்கள் ராமதாஸுடன் கொள்கைக்காகவும், லட்சத்திற்காகவும் வாழ்ந்து விட்டோம். எனவே சட்டமன்ற உறுப்பினர் என்பது பெரிய பதவியே இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமை தான் முக்கியம். எங்களுக்கு மருத்துவர் ஐயா தான் உயிர் மூச்சு, அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை எனக்கூறினார். 
 

இதையும் படிங்க: சொந்த சமூக மக்களாலேயே அன்புமணிக்கு இப்படியொரு நிலையா? - திட்டவட்டமாக சொன்ன ஜி.கே.மணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share