×
 

தபால் ஓட்டை பிரிக்காமலே நிராகரிக்கலாம்!! இந்த 4 விஷயம் இருந்தால்!? தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு!

தபால் ஓட்டு எண்ணிக்கையில் 4 காரணங்களுக்காக சிறிய உறையை திறக்காமலே நிராகரிக்கலாம் – தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்!

தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தபால் ஓட்டு எண்ணும் பணியில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, நான்கு முக்கிய காரணங்களுக்காக ஓட்டுச்சீட்டு உள்ள சிறிய உறையை திறக்காமலேயே செல்லாத ஓட்டாக நிராகரிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23 அன்று முடிந்த நிலையில், மே 4ம் தேதி காலை 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணும் பணி தொடங்கும். அதன் பிறகு 8.30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டு எண்ணும் பணி துவங்கும். கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் 500 தபால் ஓட்டுகளுக்கு ஒரு டேபிள் அமைக்கப்படும். ஒவ்வொரு டேபிளிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மைக்ரோ அப்சர்வர், மேற்பார்வையாளர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் என ஐந்து பேர் பணியாற்றுவார்கள்.

தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, முதலில் தேர்தல் கமிஷன் அனுப்பிய படிவம் என்பதை உறுதி செய்த பின்னரே படிவம்-13C-ஐ திறக்க வேண்டும். உள்ளே உறுதிமொழி படிவம் இல்லை என்றால், உறுதிமொழி படிவத்தில் வாக்காளர் கையொப்பம் இல்லை என்றாலோ, அதிகாரியின் சான்றொப்பம் இல்லை என்றாலோ, உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்ட ஓட்டுச்சீட்டு வரிசை எண்ணும் சிறிய உறையில் (படிவம்-13B) எழுதிய வரிசை எண்ணும் மாறுபட்டிருந்தாலோ – இந்த நான்கு காரணங்களுக்காக சிறிய உறையை திறக்காமலேயே செல்லாத ஓட்டாக நிராகரிக்கலாம்.

இதையும் படிங்க: தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாத அரசு ஊழியர்கள்!! 19,600 பேர் ஆப்சென்ட்!! சென்னையில் மோசம்!

இந்த நான்கு விவரங்களும் சரியாக இருந்தால் மட்டுமே சிறிய உறையை திறந்து ஓட்டுச்சீட்டை வெளியே எடுக்க வேண்டும். ஓட்டுச்சீட்டில் வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்காமல் இருந்தாலோ, ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு டிக் செய்திருந்தாலோ, யாருக்கு ஓட்டு என்று புரியாத நிலை இருந்தாலோ, சிதைந்திருந்தாலோ அல்லது வாக்காளரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏதேனும் எழுதப்பட்டிருந்தாலோ அந்த ஓட்டு செல்லாததாகக் கருதப்படும்.

தேர்தல் அதிகாரிகள், இந்த விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றி, எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி ஓட்டு எண்ணும் பணியை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் ஓட்டு எண்ணிக்கையை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஓட்டு எண்ணும் போது சிரிக்கக்கூடாது! கூடுதல் கவனம் தேவை! தேர்தல் அலுவலர்களுக்கு கறார் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share