வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!
இந்தியன் ஆயில் நிறுவனம் பிரீமியம் எக்ஸ்பி 100 பெட்ரோல் மற்றும் எக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணியின் ஈரான் மீதான தாக்குதலால் உலக அளவில் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் போர், சர்வதேச எண்ணெய் சந்தையை பெரிதும் பாதித்துள்ளது.இஸ்ரேல், ஈரானின் முக்கிய எண்ணெய் வயல்களை தாக்கியதற்கு பதிலடியாக ஈரான், கத்தாரின் மிகப்பெரிய எண்ணெய் வயலை தாக்கியது.
மேலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகளால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. தற்போதும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த உலகளாவிய எண்ணெய் நெருக்கடியை எதிர்கொள்ளும் விதமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது பிரீமியம் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
குறிப்பாக, எக்ஸ்பி 100 பிரீமியம் பெட்ரோல் மற்றும் எக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விலையும் கிலோலிட்டருக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூகுள் பிளே ஸ்டோரில் இந்த APP-தான் டாப்..!! சாட்ஜிபிடியை முந்திய ஆப் இதுதானாம்..!!
எக்ஸ்பி 100 பெட்ரோல் லிட்டருக்கு ரூ.149 என்ற விலையிலிருந்து ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், எக்ஸ்ட்ரா க்ரீன் பிரீமியம் டீசல் லிட்டருக்கு ரூ.91.49 என்ற விலையிலிருந்து ரூ.92.99 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்பி 100, நாட்டின் முதல் 100 ஆக்டேன் பிரீமியம் பெட்ரோல் ஆகும். இது உயர் ரக சொகுசு கார்கள், பெரிய பைக்குகள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களுக்கு சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.
பிரீமியம் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது, இந்த வகை எரிபொருளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை ஏற்றம் காரணமாகவே இந்த உள்நாட்டு விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து செலவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, உயர் ரக வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனால் கூடுதல் பாதிப்பை சந்திக்க நேரிடும். எண்ணெய் நெருக்கடி நீடித்தால், இன்னும் பல எரிபொருள் விலை உயர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!! மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!