பழங்குடி மக்களின் இயற்கை வாழ்வே உலக அமைதிக்கு வழிகாட்டி..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு உருக்கம்..!!
தற்போது உலகம் பல்வேறு பதற்றங்கள், மோதல்கள் மற்றும் போர்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பாதையை பழங்குடி மக்களின் எளிய வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, டெல்லியில் இருந்து இந்தூர் வந்தடைந்தபோது மாநில ஆளுநர் மங்கு பாய் பட்டேல் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் ஆகியோர் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் அவர் பேதுல் மாவட்டத்திற்கு சென்று, பிரம்ம குமாரிகள் ஆன்மீக அமைப்பு ஏற்பாடு செய்த ‘ஆன்மீக விழிப்புணர்வால் பழங்குடியின சமூகத்தை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, பழங்குடி சமூகங்களின் மரபுகளும் வாழ்க்கை முறையும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பிரதிபலிப்பதாகப் புகழ்ந்தார். “பழங்குடி மக்கள் பூமி, சூரியன், நீர், மரங்கள் உள்ளிட்ட இயற்கையின் அனைத்து அம்சங்களையும் வழிபடுகின்றனர். இயற்கையுடன் ஆழமான தொடர்பு கொண்ட அவர்களின் வாழ்வு, இன்று பதற்றம் நிறைந்த உலகுக்கு அமைதிக்கான முன்மாதிரியாகத் திகழ்கிறது” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பழங்குடி மக்கள் சுயமரியாதை, பொறுமை மற்றும் எளிமையுடன் வாழ்வதாகவும், தங்கள் பிரச்சனைகளைப் பற்றி புகார் செய்யாமல், எதையும் கேட்காமல், இயற்கையின் மீது நம்பிக்கை வைத்து அமைதியாக வாழ்வதாகவும் சுட்டிக்காட்டினார். “அவர்கள் வன்முறையை விலக்கி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். பண்டைய காலத்திலிருந்து இன்று வரை அவர்களின் வாழ்க்கை முறை மாறாமல் தொடர்கிறது. ஈரக் களிமண்ணைப் போல் எளிதில் வடிவமைக்கக்கூடிய அவர்களின் இயல்பு, ஆன்மீகத்தின் அடிப்படைப் பண்புகளுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பத்ம விருதுகள் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!
பழங்குடியினரை ஆதிவாசிகள் அல்லது வனவாசிகள் என்று அழைப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்கள் கோவில்கள் அல்லது தனி வழிபாட்டுத் தலங்கள் கட்டாமல், பஞ்சபூதங்களான பூமி, வானம், காற்று, நீர், சூரியன், சந்திரன் ஆகியவற்றையே நேரடியாக வணங்குவதாக விளக்கினார். இந்த இயற்கை வழிபாடு அவர்களுக்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆனந்தத்தைத் தருவதாகவும், தற்காலத்தில் இந்த வாழ்க்கை முறை எளிமை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் சிறந்த உதாரணமாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி பழங்குடி சமூகத்தின் மேம்பாட்டில் ஆன்மீகத்தின் பங்கை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. ஜனாதிபதியின் இந்தப் பயணம் மத்திய பிரதேசத்தின் பழங்குடி பகுதிகளின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் பாரம்பரியத்தை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மராட்டிய அரசியல்: உத்தவ் தாக்கரே சிவசேனாவில் பெரும் பிளவு.. 6 எம்.பி.க்கள் ஷிண்டே அணியில் இணையும் அறிகுறி..!!