தமிழக காவல்துறைக்கு பெருமை.. 3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு..!!
உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்திற்கு 604 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்தியா விடுதலை பெற்று 79 ஆண்டுகள் நிறைவடைந்து, 80-வது ஆண்டை எட்டும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளன்று, தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும்.
டெல்லியில் செங்கோட்டை வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இது ஒவ்வொரு ஆண்டும் மரபாக நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். அதேநேரம் தமிழ்நாட்டில், சென்னையில் முதலமைச்சர் விஜய் தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மாநிலம் முழுவதும் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கொடி ஏற்றும் விழாக்கள் நடைபெறும்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையினரின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு பதக்கங்களை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம் 92 பேருக்கும், வீரதீர செயலுக்கான பதக்கம் 301 பேருக்கும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கம் 604 பேருக்கும் வழங்கப்படவுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஹாஸ்பிட்டலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??
அவர்கள்: கூடுதல் எஸ்பி ஜெ. விஜய் ஆனந்த், கூடுதல் எஸ்பி கே. ராமச்சந்திரன் மற்றும் உதவி கமாண்டண்ட் எஸ். குமார். இவர்களின் நீண்டகால சேவை, செயல்பாடுகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இன்ஸ்பெக்டர் மாலதி, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஏஎஸ்பி சிவசங்கர், ஏஎஸ்பி சோமசுந்தரம், ஏஎஸ்பி கோவிந்தராஜூ, டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர் பத்தருன்னிசா பேகம், இன்ஸ்பெக்டர் மதிமாறன், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, இன்ஸ்பெக்டர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் லெட்சுமி, இன்ஸ்பெக்டர் ஜெயா இளவரசி, இன்ஸ்பெக்டர் கோபால், உதவி கமாண்டண்ட் மணிமாறன், இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சதுரகிரி ஆகியோர் அடங்குவர்.
இந்த பதக்கங்கள் காவல்துறையினரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி வழங்கப்படுவது வழக்கம். சுதந்திர தினத்தன்று இத்தகைய அங்கீகாரம் அளிப்பது, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைகிறது. நாளை நடைபெறும் விழாக்களில் இந்த பதக்கங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் விரிசல்... எஸ்.பி.வேலுமணிக்கு ஷாக் கொடுத்த தங்கமணி... சல்லி சல்லியாய் நொறுங்கும் அதிமுக...!