"மாணவர் போராட்டம் பிரதமரை எழுப்பியுள்ளது; ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை!" சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்!
மாணவர்களின் போராட்டம் பிரதமரை எழுப்பியுள்ளது என்றும், கல்வி அமைப்பைச் சிதைத்த தர்மேந்திர பிரதானை வைத்துக்கொண்டு பிரதமர் கூறுவது ஏமாற்று வேலை என்றும் எம்பி சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.
டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் வீரியமிக்க போராட்டம், உறங்கிக் கொண்டிருந்த பிரதமரை விழிப்படையச் செய்துள்ளதே தவிர, அவரது பதிவில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்த எந்தவொரு உறுதியான அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாகச் சாடியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி மீதும், நாட்டின் உயர்கல்வி அமைப்பை முற்றிலும் சிதைத்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீதும் நம்பிக்கையை இழந்ததால்தான் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அதே தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து அமைச்சராகப் பதவியில் வைத்துக்கொண்டே, 'தவறிழைத்த யாரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்' என்று பிரதமர் கூறுவது மாணவர்களை முற்றிலும் ஏமாற்றும் வேலை.
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர் அமைதியான முறையில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது துளியும் மனிதத்தன்மையின்றி காவல்துறை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மாணவர்கள் மீது இத்தகைய அடக்குமுறையை ஏவிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பிரதமர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
இதையும் படிங்க: ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!
மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றாத வரையில், அரசின் எந்தவொரு சமாதானப் பேச்சோ அல்லது சமாளிப்புகளோ மாணவர்கள் மத்தியில் எவ்வித நம்பிக்கையையும் ஏற்படுத்தாது என்பதைப் பிரதமர் உணர வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! ஜூலை 17-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!