தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்!
புதுச்சேரியில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதல்வர் ரங்கசாமி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார். முன்னதாகத் தனது வழக்கமான ஆன்மீக முறைப்படி கதிர்காமம் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தித் தனது தேர்தல் பணியைத் தொடங்கினார்.
புதுச்சேரி அரசியலில் ஆன்மீக நம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர் முதல்வர் ரங்கசாமி. எந்த ஒரு முக்கியப் பணியைத் தொடங்குவதற்கு முன்னரும் கதிர்காமத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது அவரது வழக்கம். அந்த வகையில், இந்தத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ள இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனுக்களையும் முருகன் பாதத்தில் வைத்து அவர் அர்ச்சனை செய்தார். இதனையடுத்து கட்சித் தொண்டர்கள் புடைசூழ அவர் தேர்தல் அலுவலகத்திற்குப் புறப்பட்டார்.
இந்த தேர்தலில் முதல்வர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.ரங்கசாமியின் கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில் அவர் மீண்டும் களம் காண்கிறார். தட்டாஞ்சாவடியுடன் சேர்த்து இம்முறை மங்கலம் தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்: கேரளா, புதுவை, அசாம் சட்டமன்ற தேர்தல்.. தொடங்கியது வேட்புமனு தாக்கல்..!!
கோவில் வழிபாட்டை முடித்துக் கொண்டு, அந்தந்தத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தனது வேட்புமனுக்களை ரங்கசாமி சமர்ப்பித்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதல்வர் ரங்கசாமியின் இந்த இரட்டைத் தொகுதிப் போட்டி புதுச்சேரி அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவரது வெற்றிக்காகத் தொண்டர்கள் இப்போதே தீவிரத் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!