×
 

முடிவுக்கு வந்த புதுச்சேரி கூட்டணி இழுபறி! ரங்கசாமி சம்மதத்தால் என்.டி.ஏ-வில் இணைந்தது ல.ஜ.க!

மத்திய அமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு புதுச்சேரி என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. என்.ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் என்.டி.ஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) கூட்டணியில் நிலவி வந்த தொகுதிப் பங்கீடு இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு நேரில் சென்ற முதல்வர் ரங்கசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. குறிப்பாக அமித்ஷாவின் மிரட்டல் தொனியிலான எச்சரிக்கை மற்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) சேர்க்கை போன்ற விவகாரங்களால் பரபரப்பு நிலவியது. இந்தச் சூழலில், புதுச்சேரி வந்திருந்த மத்திய அமைச்சரை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டணிக் கட்சிகளிடையே சுமூகமான முறையில் இடங்கள் பிரிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் ஒரு புதிய திருப்பமாக, லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் இக்கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள். என்.ஆர் காங்கிரஸ்: 16 தொகுதிகள், பாரதிய ஜனதா கட்சி (பாஜக): 10 தொகுதிகள், லட்சிய ஜனநாயக கட்சி (LJK): 02 தொகுதிகள், அதிமுக: 02 தொகுதிகள்.

இந்தத் தேர்தலில் சில முக்கிய தொகுதிகள் கைமாறியுள்ளன. கடந்த முறைப் போட்டியிட்ட இடங்களைத் தக்கவைத்துக் கொண்ட சூழலில், முத்தியால்பேட்டை மற்றும் லாஸ்பேட்டை ஆகிய தொகுதிகளில் இம்முறை என்.ஆர் காங்கிரஸ் நேரடியாகக் களம் காண்கிறது. அதே நேரத்தில், ரங்கசாமியின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் மாஹே மற்றும் ராஜ்பவன் ஆகிய இரண்டு தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021 தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு, இம்முறை வெறும் 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சிய ஜனநாயக கட்சியின் வருகை மற்றும் பாஜகவின் கூடுதல் இடத் தேவையால் அதிமுகவின் இடங்கள் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த தொகுதி பங்கீடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி தனது முழுமையான தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தத் தயாராகி வருகிறது.

இதையும் படிங்க: வேகமெடுக்கும் கேரள தேர்தல் களம்: 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! தீவிரம் காட்டும் பாஜக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share