"KINGFISHER ❤️ MUMTAJ": ஒயின் வாங்கினால் பீர் ஃபிரீயாம்..!! ஆஃபருக்கு ஆப்பு வெச்ச கலால்துறை..!!
புதுச்சேரியில் காதலர் தினத்தையொட்டி மதுக்கடை ஒன்றில் சலுகை ஆபர் அறிவித்து போர்டு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசம், குறைந்த விலையில் பல்வேறு பிராண்டுகளில் மதுபானங்கள் கிடைப்பதால் புகழ்பெற்றுள்ளது. அழகிய கடற்கரைகள், பிரெஞ்சு பாணி கட்டிடங்கள், அமைதியான சூழல் ஆகியவற்றுடன் மது விற்பனை இங்கு சிறப்பிடம் பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மதுபிரியர்கள் தினமும் புதுச்சேரி நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிலைமை வேறு. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து இளைஞர்கள், இளம் பெண்கள் கூட்டமாக பைக் மற்றும் கார்களில் படையெடுத்து வருவது வழக்கம். இதனால் புதுச்சேரியின் அடையாளங்களில் மதுபான விற்பனைக்கு தனி இடம் உண்டு.
இதையும் படிங்க: “கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடும் பாஜக!” புதுச்சேரியில் திருமாவளவன் விமர்சனம்!
கடந்த சில ஆண்டுகளாக இத்துறையின் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மது விற்பனை மூலம் சுமார் ரூ.1,100 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது. பண்டிகை நாட்களைத் தாண்டி, சமீப காலமாக சிறப்பு நிகழ்வுகளையொட்டியும் மதுக்கடைகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன.
பொதுவாக துணிக்கடைகள், இனிப்புக் கடைகள் போன்றவை விசேஷ தினங்களில் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பது வழக்கம். அதுபோலவே புதுச்சேரியிலும் காதலர் தினத்தையொட்டி சில மதுக்கடைகள் கவர்ச்சிகரமான ஆபர்களை வெளியிட்டன. அதில் ஒரு கடை குறிப்பிடத்தக்க சலுகையை அறிவித்திருந்தது. முழு பாட்டில் (புல்) ஒயின் வாங்கினால் 4 டின் பீர் இலவசமாக தரப்படும் என்பதுதான் அந்த ஆபர். இதைப் பற்றிய தகவல் வாட்ஸ்ஆப், சமூக வலைதளங்கள் வழியாக வேகமாக பரவியது. மதுபிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்த தகவல் கலால் துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. உடனடியாக அந்த மதுக்கடைக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில், காதலர் தினம் போன்ற சிறப்பு நாட்களில் சலுகை விலையிலோ இலவச பொருட்களோ தருவது கலால் விதிமுறைகளுக்கு முரணானது என தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சலுகை போர்டுகளை அகற்றுமாறும், இதுபோன்ற ஆபர்களை தொடர்ந்து வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து அந்த கடை உடனடியாக சலுகையை நிறுத்திவிட்டது. போர்டும் அகற்றப்பட்டது. இதனால் மதுபிரியர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்த பலருக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மது விற்பனை தொடர்பான விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவது இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமரையே தாக்க முயற்சி!! என்ன தண்டனை?! எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது நடவடிக்கை கோரி பாஜ பெண் எம்.பிக்கள் கடிதம்!