பஞ்சாப்பை புரட்டிப்போடும் வெள்ளம்.. கல்வி நிறுவனங்களுக்கு வரும் 7ம் தேதி வரை விடுமுறை..!!
பஞ்சாப் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு வரும் 7ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அறிக்கையின்படி, (செப்டம்பர் 3) இன்று மேற்கு இமயமலைப் பகுதிகளான பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் கனமழை தொடர்ந்து பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பஞ்சாப் மாநிலத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாக பதான்கோட், ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், கபுர்தலா, ஃபாசில்கா, தர்ன் தரன் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமிர்தசரஸ் நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் அழிந்துள்ளன.
இதையும் படிங்க: கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்!! நூழிலையில் தப்பிய மக்கள்.. கடவுளாய் காப்பாற்றிய வீரர்!!
சட்லெஜ், பீஸ் மற்றும் கக்கர் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து, பல பாலங்கள் மூழ்கியுள்ளன. மதோபூர் ஹெட்வொர்க்ஸில் நீர் வரத்து 1988-ஆம் ஆண்டு வெள்ள அளவை நெருங்கியுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் பாண்டோ அணையில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதால், சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தொடர்ந்து பெய்யும் மழையால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பஞ்சாபிற்கு உதவும் வகையில், கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் வழங்குவார்கள் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் நேற்று கூறினார். மேலும் நாளை பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடும் அவர், வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் செல்கிறார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களுக்கு வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் உத்தரவின் பேரில் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் வெளியிட்டார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை உறுதி செய்யுமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு முழு முயற்சி எடுப்பதாகவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்பு, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 3 வரை அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஒவ்வொருவரும், அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றும்படியும் பெய்ன்ஸ் கேட்டு கொண்டார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 33 பேர் பரிதாப பலி..!!