புதினை சந்திக்க அனுமதி மறுப்பு.. ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!
இந்தியா வரும் அதிபர் புதினை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவரான தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று மாலை 5 மணிக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வருகை தருகிறார். இப்பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார். இந்நிலையில், ரஷ்ய அதிபரைச் சந்திக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு அரச தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசுவது நீண்டகால ஜனநாயக மரபு. முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களில் இந்த மரபு கடுமையாகப் பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் இந்த மரபு முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது” என்று சாடினார்.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்... காங்கிரஸில் இணைய முடிவெடுத்த விஜய்... சீக்ரெட் மீட்டிங் உண்மையை போட்டுடைத்த ஜோதிமணி...!
வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போதும், தானோ அல்லது பிற எதிர்க்கட்சித் தலைவர்களோ வெளிநாடு செல்லும்போதும் “எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க வேண்டாம்” என்று மத்திய அரசு அந்தத் தலைவர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் ராகுல் குற்றம் சுமத்தினார். “நாங்களும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இது ஒரு கட்சியின் அரசு மட்டுமல்ல, இந்தியாவின் அரசு. ஆனால் தற்போது பிரதமரும் வெளியுறவுத் துறையும் வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சிகளிடமிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்” என்று அவர் குமுறினார்.
போதிய பாதுகாப்பு இல்லை என்ற பெயரில் இந்தத் தனிமைப்படுத்தல் நடப்பதாகவும், உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மாறுபட்ட கருத்துகளையும் மாற்றுக் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்துவதை இந்த ஆட்சி விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
ரஷ்ய அதிபரின் வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு சந்திப்பு மறுக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2026லும் திமுகவுடன் தான் கூட்டணி.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உறுதி..!