விளைவுகள் பேரழிவை தரும்! அமெரிக்காவை எச்சரிக்கும் கத்தார்; அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா ராணுவ ரீதியிலான தாக்குதல்களை முன்னெடுத்தால், அது மத்திய கிழக்கு பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு பெரும் போராக வெடிக்கும் என கத்தார் நாடு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு எடுத்து வரும் வன்முறை நடவடிக்கைகளைக் கண்டித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வான்வழித் தாக்குதல்கள் உள்ளிட்ட ராணுவ விருப்பங்களை பரிசீலித்து வருகிறார். இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய தூதரக உறவு கொண்டுள்ள கத்தார், நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க தீவிரமான சமரச முயற்சிகளில் இறங்கியுள்ளது.
கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மஜித் பின் முகமது அல்-அன்சாரி இன்று தோஹாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் ஒட்டுமொத்த உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் நேரடி அச்சுறுத்தலாகும்; இது விவரிக்க முடியாத பேரழிவுகளை உருவாக்கும்" எனத் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு தரப்புடனும் கத்தார் தொடர்ந்து தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்திய அவர், "இன்னும் தூதரக ரீதியிலான தீர்வுகளுக்கு இடம் இருக்கிறது; எனவே பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என வலியுறுத்தினார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலின் போது கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் குறிவைக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அத்தகைய சூழல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: இரத்த காடாக மாறும் ஈரான்! 2 நாளில் 2,000 பேர் பலி; முடங்கிய இணையத்தால் உலகிற்கு தெரியாத கொடூரம்!
ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தொடங்கிய போராட்டம் தற்போது 31 மாகாணங்களுக்கும் பரவி வன்முறையாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களைக் காப்பாற்ற அமெரிக்கா ‘உதவி’ செய்யப்போவதாகத் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இது ஈரானைத் தாக்கும் ஒரு தந்திரம் என அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த நிலையில், வான்வெளியை மூடுவது மற்றும் போக்குவரத்துத் தடைகள் எனப் பிராந்தியம் முழுவதும் போர் அச்சம் சூழ்ந்துள்ளதால், கத்தாரின் இந்த எச்சரிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற உலக நாடுகளும் ஈரானில் அமைதி திரும்ப வேண்டும் எனத் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றன.
இதையும் படிங்க: ஈரானில் தீவிரமடையும் போராட்டங்கள்..!! ஸ்டார்லிங்க் இணைய சேவை முடக்கம்..!! அரசு அதிரடி..!!