ஜனாதிபதி சொல்லியும் கேட்காத ராகுல்காந்தி!! வடகிழக்கு மாநிலங்களுக்கும் அவமதிப்பு? காங்., விளக்கம்!
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் கூறியும் அஸ்ஸாம் பாரம்பரியத் துண்டை அணியவில்லை என்று பாஜக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது
டெல்லியில் குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த 'அட் ஹோம்' விருந்தில் பெரிய அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களை மையமாகக் கொண்ட இந்த விருந்தில், அனைத்து விருந்தினர்களுக்கும் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய துண்டான 'கமோசா' (பட்டா) வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் அனைவரும் அதை கழுத்தில் அணிந்திருந்தனர்.
ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த கமோசாவை அணியவில்லை என்று பாஜக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் இருமுறை அறிவுறுத்தியும் ராகுல் அணிய மறுத்ததாகவும், இது வடகிழக்கு மக்களையும் குடியரசுத் தலைவரையும் அவமதித்த செயல் என்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூட "ஆழமான அவமானம்" என்று கூறி, ராகுலிடம் உடனடி மன்னிப்பு கோரினார். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் "அவமானகரமானது" என்று கூறி, வடகிழக்கு கலாச்சாரத்தை மதிக்காத செயல் என்று தாக்கினர்.
இதையும் படிங்க: குடியரசு தினவிழாவில் இப்படியா? காவலர்களின் கவுரவம் நடுத்தெருவில் நிற்கிறது! இரவல் பதக்கம் சர்ச்சை!
இதற்கு உடனடியாக பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ராகுல் காந்தி கமோசா அணிந்திருந்தார். சாப்பிடும் போது அதை மடித்து வைத்தார். இதை பாஜக பிரச்சனையாக்கியுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், குடியரசு தின அணிவகுப்பில் ராகுல் மற்றும் கார்கேவுக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கியது அரசியலமைப்பை அவமதித்தது என்றும், மாநில அமைச்சர்களுடன் வரிசையில் காத்திருக்க வைத்தது வேண்டுமென்றே எதிர்க்கட்சியை அவமதித்தது என்றும் குற்றம்சாட்டினார்.
"வடகிழக்கு மாநிலங்களை அவமதிப்பதற்காக காங்கிரஸ் இப்படி செய்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டை கண்டிக்கிறேன். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸை அவமதிக்க பாஜக இதை செய்கிறது" என்று கார்கே கூறினார்.
இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடியரசு தினத்தன்று நடந்த இந்த சம்பவம் அரசியல் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி உண்மையில் அணிந்தாரா இல்லையா என்பது தொடர்ந்து விவாதமாக உள்ளது.
இதையும் படிங்க: டெல்லி வரை திமிறிய ஜல்லிக்கட்டு காளை! தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் சிறம்பங்கள்!! மாஸ் மொமண்ட்!