இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்தவரே பிரதமர் மோடி தான்..!! ராகுல் காந்தி விளாசல்..!!
கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் அரசியல் களைப்பை அதிகரித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்ததாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் 33-வது நாளை எட்டியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கத் தவறிய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையில் பலர் காயமடைந்தனர். போலீஸ் தடியடியும் நடைபெற்றது. இருப்பினும், ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டம் பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடிதான். கல்வி முறையை முழுமையாக கைப்பற்றி அழிப்பதை அவர் அனுமதித்து ஊக்குவித்தார். அதற்குக் காரணமானவர்களை பாதுகாத்தார்” என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
மாணவர்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்:
1. தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
2. மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
3. போராட்டக்காரர்களைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தண்டனை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவித்தார். தேர்வு கசிவில் ஈடுபட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சர்ச்சை கல்வித் துறையில் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட, அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. போராட்டம் தொடரும் நிலையில், இந்த விவகாரம் நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில்.. தொடங்கியது NDA எம்.பி.க்கள் கூட்டம்..!!