×
 

ராகுல்காந்தி - தவெக விஜய் போன் பேச்சு?! விரைவில் நேரில் சந்திப்பு! புகைச்சலில் திமுக கூட்டணி!

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுடன், த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாக வெளியான தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியுடன் தமிழ் வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் தொலைபேசியில் பேசிய தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தரப்பு, தி.மு.க. கூட்டணியில் அதிகத் தொகுதிகளை எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்த நிலையில், விஜயுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணி படுதோல்வி அடைந்ததும், முதல்வர் மு.க. ஸ்டாலின் “பீகார் முடிவு இண்டியா கூட்டணிக்கு ஒரு பாடம்” எனக் கூறியது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில்தான் ராகுல் காந்தியும் விஜயும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இதையும் படிங்க: மக்கள் நல கூட்டணி உருவானதில் உள்ள மர்மங்கள்!! குட்டையை குழப்பும் மல்லை சத்யா! வெளிவருமா உண்மைகள்?!

விஜய் அழைப்பில், தமிழகம் முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை எதிர்த்து த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ராகுல், “வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து ஒரே எண்ணம் கொண்டவர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் ஏற்கனவே கட்சித் தலைவர்கள் சிலரிடம் கூறியிருந்தேன். அதன்படி த.வெ.க.வும் களத்தில் இறங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது” எனப் பாராட்டியதோடு, சில முக்கிய புள்ளிவிபரங்களையும் விஜயிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த உரையாடலுக்குப் பிறகே தமிழகம் முழுவதும் த.வெ.க.வின் வாக்காளர் பட்டியல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் அதிர்ச்சி தரும் தகவல்: ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் மிக நெருக்கமான இரு நண்பர்கள் வெளிநாட்டில் அவர்கள் இருவரையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் வகையில் திட்டம் தீட்டியுள்ளனர். விரைவில் ராகுல் - விஜய் நேரடிச் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அந்தச் சந்திப்புக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ரகசியமாகத் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் கிரிஷ் ஷோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோரும், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோரையும் இணைத்து புதிய வாட்ஸ்அப் குழு ஒன்றை காங்கிரஸ் தரவு ஆய்வுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி உருவாக்கியுள்ளார். இந்தக் குழுவில் தொகுதிப் பங்கீடு, கூட்டணி உத்தி உள்ளிட்ட விவகாரங்கள் மட்டுமே விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

பீகார் தோல்வி காங்கிரஸுக்கு தமிழகத்தில் புதிய கூட்டணித் தேடலைத் தொடங்கி வைத்திருக்கிறது. தி.மு.க.வுடன் மட்டும் நம்பிக்கை வைக்க முடியாது என்ற நிலையில், விஜயின் த.வெ.க.வுடன் நெருக்கம் காட்டுவது 2026 தேர்தலுக்கு புதிய வியூகமாக இருக்கும் என காங்கிரஸ் தலைமை கருதுவதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: திமுகவும் - பாஜகவும் மிரட்டுறாங்க!! தேர்தல் கமிஷன் பார்த்துக்கோங்க!! - தவெக பாயிண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share