பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!
ராகுல்காந்தி பேச்சுக்கு தடை விதித்த சம்பவத்திற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தியின் பேச்சுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட சம்பவம், நாடாளுமன்ற வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கியபோது, 2020-ஆம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து பேசினார். அவர் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்திலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்ட முயன்றார்.
அந்த புத்தகத்தில் இருந்து ஒரு பிரபல பத்திரிகையில் வெளியான கட்டுரையை அவர் கையில் வைத்திருந்து பேசத் தொடங்கினார். இதில் சீனப் படைகளின் ஊடுருவல், எல்லைப் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் நடந்த உரையாடல்கள் போன்றவை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இதற்கு உடனடியாக ஆளும் கட்சியான பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்படாத அல்லது வெளியிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினார். ராகுல் காந்தி தொடர்ந்து பேச முயன்றபோது, அவரது மைக் துண்டிக்கப்பட்டது அல்லது பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ராகுல் காந்தி அவர்களின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கும் அதிமுக..! சரியான பாடம் காத்திருக்கு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது என்றார். மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சி என்றும் இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும் எனவும் கூறினார். மத்திய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், கருத்து வேறுபாடு துரோகம் அல்ல., அது ஜனநாயகத்தின் வலிமை என்றும் ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் இலங்கை கடற்படையின் கைது... மீனவர்களை திரட்டி போராட்டம்..! செல்வப் பெருந்தகை திட்டவட்டம்..!