ராஜராஜ சோழன் சதய விழா.! தஞ்சை பெரிய கோயில் விழாக்கோலம்..! நாட்டுப்புற கலைஞர்கள் பேரணி.!!
ராஜராஜ சோழன் சதய விழா தஞ்சையில் களைக்கட்டி உள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-ஆம் ஆண்டு சதய விழா கோலாகலமாகத் தொடங்கியது. தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சிறப்பான ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜராஜ சோழன், ஏராளமான போர்களில் வெற்றி பெற்று, தனது வெற்றியை உலகறியச் செய்யும் வகையில் வானளாவிய பெரிய கோயிலைக் கட்டினார். அதன் மூலம் தமிழர்களின் கட்டிடக்கலையை உலக அரங்கில் நிலைநாட்டினார். அவரது பிறந்த நாளைக் குறிக்கும் சதய நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, தஞ்சை மக்கள் ஆண்டுதோறும் சதய விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு இருநாள் விழாவாக அமைந்திருந்தது.விழாவின் தொடக்கமாக, தஞ்சை அரண்மனை வளாகத்திலிருந்து 1041 நாட்டுப்புறக் கலைஞர்களின் மாபெரும் பேரணி விமரிசையாகப் புறப்பட்டது. மேள தாளங்களுடன் புலியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம்பெற்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழன் போல் வேடமிட்ட ஒருவர், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் சேவகர்களுடன் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நகர்வலம் வந்தார். இந்தக் காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.பேரணி பெரிய கோயிலை அடைந்ததும் மங்கல இசையும் ஒதுவார்களின் தேவாரம், திருவாசகப் பாடல்களும் ஒலித்தன.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!
அதைத் தொடர்ந்து இசைக்கச்சேரிகள், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள், ராஜராஜன் குறித்த கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இரவுவரை நடைபெற்றன.இரண்டாம் நாள் காலை 7.30 மணிக்கு மாமன்னன் ராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வுடன் தொடங்கியது. அதன்பின் இரவுவரை கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்தன. இந்த விழா சோழப் பேரரசின் பெருமையையும், தமிழர் கலைப் பாரம்பரியத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்தது.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!