#BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகளில் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் பெற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சோகமான செய்தியாக அமைந்துள்ளது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டை 25 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் தற்போது 5.25 சதவீதமாக உள்ள ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உயர்கிறது.
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு ரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ரெப்போ ரேட் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு! இந்திய, அமெரிக்க நிறுவனங்கள் தீவிர ஆலோசனை!
இறுதியாக 2025 டிசம்பர் மாதத்தில் 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ ரேட் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை 5.25 சதவீதமாகவே நீடித்து வந்த நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வங்கிகளில் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களைப் பெறுவதற்கான வட்டி விகிதம் உயரக்கூடும். இதனால் மாதாந்திர EMI தவணைத் தொகையும் கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக, வங்கியில் ரூ.3 லட்சம் தனிநபர் கடன் பெற்றிருந்தால், தற்போது செலுத்தி வரும் மாதாந்திர தவணைத் தொகை இனி ரூ.10,500 அல்லது ரூ.11,000 வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு தோராயமான உதாரணம் மட்டுமே. உண்மையான EMI தொகையானது கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து மாறுபடும்.
இதனால் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை உயர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, விலை நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் முதலீடு குறையக்கூடும் என்றும், பொதுமக்களின் நுகர்வும் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
உலக அளவில் தற்போது பல்வேறு நிச்சயமற்ற சூழல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி உயர்வு சாமானிய மக்களையும் நேரடியாக பாதிக்கக்கூடும். குறிப்பாக, ஃப்ளோட்டிங் ரேட் அடிப்படையில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி விகிதம் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அதேபோல், இனி தனிநபர் கடன், வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கும், அந்தக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. இதனால் மாதாந்திர EMI தொகையும் தோராயமாக ரூ.500 முதல் ரூ.1,000 வரை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பதால் கடன் பெறுவது குறையக்கூடும். கடன் பெறுவது குறையும் நிலையில் முதலீடும் குறைய வாய்ப்புள்ளது. முதலீடு குறையும்போது பொதுமக்களின் நுகர்வும் கணிசமாகக் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும் காலங்களில் அதைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும்.
இதையும் படிங்க: இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!