குடியரசு தினப் பரிசு: டெல்லி சிறைக் கைதிகளின் தண்டனை குறைப்பு! உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் அறிவிப்பு!
77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் டெல்லி சிறைக்கைதிகளின் தண்டனை காலத்தை குறைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி சிறைகளில் உள்ள சில வகை கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் இன்று செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-இன் விதிகளின் கீழ், சீர்திருத்த நீதியை நிலைநாட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
65 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகளுக்கு அவர்களது தண்டனைக் காலத்தின் அடிப்படையில் சிறப்பு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்களுக்கு 90 நாட்கள் தண்டனை குறைக்கப்படும். 5 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்களுக்கு 60 நாட்கள் நிவாரணம் கிடைக்கும்.
1 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்களுக்கு 30 நாட்களும், ஒரு வருடம் வரை தண்டனை பெற்றவர்களுக்கு 20 நாட்களும் தண்டனை குறைக்கப்படும். இதர கைதிகளுக்கான நிவாரண விவரம்: மற்ற கைதிகளைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களுக்கு 60 நாட்களும், 5 முதல் 10 ஆண்டுகள் வரை இருப்பவர்களுக்கு 45 நாட்களும் தண்டனை குறைக்கப்படும். அதேபோல், 1 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்களுக்கு 30 நாட்களும், ஒரு வருடத்திற்கு உட்பட்டவர்களுக்கு 15 நாட்களும் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்கள் மற்றும் இளைஞர்களே நாட்டின் பலம்! குடியரசு தின உரையில் திரௌபதி முர்மு பெருமிதம்!
இந்தச் சலுகையைப் பெறுவதற்குச் சிறை விதிகளின்படி நன்னடத்தை அவசியமானது. ஜனவரி 26, 2025 முதல் ஜனவரி 25, 2026 வரையிலான கடந்த ஓராண்டு காலத்தில் எந்தவித சிறைக் குற்றங்களிலும் ஈடுபடாத கைதிகளுக்கு மட்டுமே இந்த நிவாரணம் பொருந்தும். தற்போது பரோல் அல்லது ஃபர்லோவில் இருக்கும் கைதிகளும் முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்றால் இந்தச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
யார் யாருக்குச் சலுகை கிடையாது? பொதுப் பாதுகாப்பைக் கருதி, சில வகை கடுமையான குற்றவாளிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
போக்சோ (POCSO) சட்டம், என்டிபிஎஸ் (NDPS) சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், உளவு தொடர்பான குற்றங்கள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள்.
அரசு நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதற்காகச் சிறையில் இருப்பவர்கள் மற்றும் சிவில் குற்றவாளிகள்.
அரசியலமைப்பின் யூனியன் பட்டியலில் உள்ள முக்கியப் பாடங்கள் தொடர்பான குற்றவாளிகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது என அமைச்சர் ஆஷிஷ் சூட் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு தின பாதுகாப்பு: ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையம்! 2,500 போலீசார் தீவிர கண்காணிப்பு!