×
 

மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என் ரவி..!! பதவியேற்பு விழாவில் மம்தா பேனர்ஜி பங்கேற்பு..!!

மேற்குவங்க ஆளுநராக ஆர்.என் ரவிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநராக இன்று (மார்ச் 12, 2026) பதவியேற்றார். கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் (முன்னாள் ராஜ் பவன்) நடைபெற்ற பிரமாண விழாவில், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், சட்டமன்றத் தலைவர் பிமன் பானர்ஜி, மூத்த அமைச்சரும் கொல்கத்தா மேயருமான பிர்ஹாத் ஹகீம், இடதுசாரிக் கூட்டணித் தலைவர் பிமன் போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக தலைவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, ஆர்.என். ரவி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழ்நாட்டில் சுமார் நான்காண்டுகள் ஆளுநராக பணியாற்றியவர்.

இதையும் படிங்க: தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

சென்னையிலிருந்து விடைபெற்று, நேற்று மாலை கொல்கத்தா வந்தடைந்த அவர், இன்று காலை 11.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆர்.என். ரவி, இந்திய உளவுத்துறையில் (ஐபி) முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவரது நியமனம் தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னதாக சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மேற்கொண்ட சில நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, மேற்கு வங்கத்தில் அத்தகைய அணுகுமுறை பொருந்தாது என எச்சரித்திருந்தார்.

இருப்பினும், இன்றைய பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியேற்பு விழா, மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஆளுநர் ரவி, மாநில ஆளுநர் மாளிகையை (லோக் பவன்) மக்களின் நலனுக்கான அமைப்பாக மாற்றுவதற்கு முயற்சி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான உறவுகளில் இவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்.

இதையும் படிங்க: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share