இந்தியாவின் மாபெரும் 2 சக்திகள்.. இளைஞர்களின் திறனே மிகப்பெரிய மூலதனம். மோடி பெருமிதம்..
இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் திட்டத்தை, பிரதமர் மோடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இத்திட்டத்தின் கீழ் இதுவரை 15 கட்டங்களில் மத்திய அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை பிரதமர் வழங்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக 16- வது கட்டமாக இன்று 51 ஆயிரம் இளைஞர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிய நியமன ஆணையை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி வழங்கினார். இதற்காக 47 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக இன்று பணி நியமனம் பெறும் இளைஞர்களுக்கு வாழ்த்து செய்தியை பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
அதில் வளர்ந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காலை 11 மணிக்கு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் மற்றொரு வேலைவாய்ப்பு கண்காட்சியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்பேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு ரிட்டையர்மென்ட்டா? பாஜக ரூல்ஸ் என்ன? ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை..!
தொடர்ந்து இன்று நடைபெற்ற 16வது ரோஜ்கர் மேளாவில், நாடு முழுவதும் 47 இடங்களில் 51,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று, ஆணைகளை வழங்கினார்.
அஞ்சல் துறை, இந்திய ரயில்வே, உயர் கல்வி, சுகாதாரம், உள்துறை, பாதுகாப்பு, வருவாய், அணுசக்தி, மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் இந்தப் பணியிடங்கள் அமைந்துள்ளன. ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள், மருந்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பதவிகளுக்கு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த ஆட்சேர்ப்பு, இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, சமூக நீதியை உறுதி செய்கிறது.தனது உரையில், பிரதமர் மோடி, ரோஜ்கர் மேளா திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், அவர்களின் திறன்களை மேம்படுத்தி, தேசிய வளர்ச்சியில் பங்களிக்கும் வாய்ப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
“நாட்டின் முன்னேற்றம் கிராமப்புறங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது” என்று கூறிய அவர், மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளை விவசாயிகள் தினமாகக் கொண்டாடுவதையும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ஆயுதப் படைகள் 23 நிமிடங்களில் துல்லியமாக அழித்ததைப் பற்றி பேசினார். இந்தத் தாக்குதல், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது, மேலும் இதில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகித்தன. பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாதனைகளை எட்டியதையும் அவர் பாராட்டினார்.
ரோஜ்கர் மேளாவின் மற்றொரு முக்கிய அம்சம், புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு கர்மயோகி பிராரம்ப் ஆன்லைன் தளம் மூலம் வழங்கப்படும் பயிற்சியாகும். இந்தத் தளத்தில் 400-க்கும் மேற்பட்ட இணைய கற்றல் வகுப்புகள் உள்ளன, இவை பணியிட நடத்தை, நேர்மை, மற்றும் மனிதவளக் கொள்கைகள் குறித்து பயிற்சியளிக்கின்றன. இது, புதிய ஊழியர்களை திறம்பட பணியாற்ற தயார்படுத்துகிறது.மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பார் பாரத், மற்றும் வோக்கல் ஃபார் லோக்கல் போன்ற முயற்சிகள், வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது. இளைஞர்களின் இந்த திறன் மிகப்பெரிய மூலதனம். நாட்டின் எதிர்காலத்திற்கு பெரிய உத்தரவாதம். நான் சமீபத்தில் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு நாடு திரும்பி உள்ளேன்.
மற்ற நாடுகளுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்கு பயன் அளிக்கும். ரோஜ்கர் மேளா திட்டம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அவர்கள் பங்கு முக்கியமானதாக மாறுவதற்கும் நமது அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 நாள் பயணம்.. தமிழகம் வரும் பிரதமர் மோடி.. இதற்காக தான்..!!