புதின் வருகை..!! டெல்லியில் களமிறங்கிய ஸ்னைப்பர்ஸ்..!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!
இன்று இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். இந்த வருகை, 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. உக்ரைன் போர் அமைதி முயற்சிகள், பொருளாதார ஒப்பந்தங்கள், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகம் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவரது முதல் இந்தியா வருகை என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்கும் வகையில் தனிப்பட்ட இரவு உணவு ஏற்பாடு செய்துள்ளார்.
புதினின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் உயர் அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்கு பாதுகாப்பு அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர், இந்திய தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள், ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்கினல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: 2 நாள் பயணம்..!! இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! காரணம் இதுதான்..!!
இதற்காக ரஷியாவிலிருந்து 48 உயர்மட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஏற்கனவே டெல்லியை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ட்ரோன் உதவியுடன் புதின் செல்லும் பாதைகள், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை அலசி ஆராய்ந்து வருகின்றனர். இவை அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிக்க டெல்லியில் புதிதாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பமும் அதிபர் புதின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது. முகத்தை அடையாளம் காணும் அதிநவீன கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி, அதிபர் புதின் இருவரும் சந்தித்து ஒன்றாக வரும்போது, ரஷ்ய மற்றும் இந்திய கமாண்டோக்கள் உள்புற வளையத்துக்குள் பாதுகாப்பு பொறுப்பை ஏற்க உள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், புதினின் உலகளாவிய பயணங்களின் போது பின்பற்றப்படும் கடுமையான நெறிமுறைகளை பிரதிபலிக்கின்றன, இதில் 'பூப் சூட்கேஸ்' போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 'ப்ளையிங் கிரெம்ளின்' என அழைக்கப்படும் சிறப்பு விமானம் ஆகியவை அடங்கும்.
இந்தியா வரும் அதிபர் புதின், தன்னுடன் அதிநவீன ‘ஆரஸ் செனட்’ என்ற லிமோ சின் காரை மாஸ்கோவில் இருந்து கொண்டு வருகிறார். மிகவும் பாதுகாப்பான இந்த கார் ‘சக்கரங்களில் மீதுள்ள கோட்டை’ என்று புகழப்படுகிறது. சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, இந்த லிமோசின் காரில்தான் பிரதமர் மோடியை அதிபர் புதின் அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதினின் இந்த வருகை, ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் வர்த்தகத்தை அதிகரிக்க முயல்கின்றன. கடந்த ஆண்டுகளில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது, ஆனால் சமீபகாலமாக அது குறைந்துள்ளது.
பாதுகாப்பு துறையில், ஆயுதங்கள் வாங்குதல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து விவாதங்கள் நடைபெறும். மேலும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள். டெல்லி போலீஸ் அதிகாரிகள், பொதுமக்களுக்கு போக்குவரத்து தடைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உயர் அபாய இடங்களான ராஜ்காட், பிரதமர் இல்லம் மற்றும் விமான நிலையம் ஆகியவை கடும் கண்காணிப்பில் உள்ளன.
இந்த உச்சி மாநாட்டின் மூலம், இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களை அறிவிக்கலாம். பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் புதிய முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த வருகை, உலக அரசியலில் இந்தியாவின் சமநிலை நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! இரவு விருந்து வழங்கும் பிரதமர் மோடி..!!