சபரிமலை தங்கம் திருட்டு!! விசாரணை வலையில் ஜெயராம்!! வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்!
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக, சென்னையில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
சென்னை: கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த தங்கத் திருட்டு வழக்கு தொடர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கோயிலின் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4.54 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியும் கைதானவர்.
கேரள உயர்நீதிமன்றம் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கு கண்டனம் தெரிவித்ததால், விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டுக்கு எஸ்ஐடி அதிகாரிகள் சென்று அவரிடம் விரிவான விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு! மாஸ்டர் மைண்ட் தலைமை அர்ச்சகர் அதிரடி கைது! சதி திட்டம் அம்பலமான பின்னணி!!
சபரிமலை துவார பாலகர் சிலையின் தங்கக் கவசம் தங்க முலாம் பூசுவதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது, ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றது.
ஜெயராம் தனது வாக்குமூலத்தில், தான் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், ஆனால் அவரது பண பரிவர்த்தனை அல்லது மோசடி பற்றி தனக்கு தெரியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவர் இதை வெறும் பக்தி நிகழ்ச்சியாக மட்டுமே பார்த்ததாகவும் கூறியுள்ளார். எஸ்ஐடி இவரை சாட்சியாக சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஜெயராம் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்பவர் என்பதால், இந்த தொடர்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு கோயில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்க முலாம் பூசும் பெயரில் நடந்த மோசடி, பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. எஸ்ஐடி மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் சபரிமலை போன்ற புனித தலங்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை கோயிலில் இருந்து மேலும் தங்கத்தை திருட சதி! ஆதாரங்களை அழிக்க முயற்சி! SIT அறிக்கையில் பகீர்!!