×
 
☰

நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?

சமயபுரம் அருகே சாலை விபத்து. ஆம்னி பேருந்து - கார் மோதி 9 வயது சிறுவன் உட்பட 3 பக்தர்கள் பலி. 7 பேர் காயம்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
​
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 10 பேர் தஞ்சாவூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்காக சைலோ காரில் வந்துள்ளனர்.

​நேற்று இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கட் ரோடு கடந்து பள்ளிவிடை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கோவில் வழித்தடமான இடதுபுற சர்வீஸ் சாலையில் செல்லாமல் கார் தவறுதலாக நேராகச் சென்றுள்ளது. 
சிறிது தூரம் (சுமார் 5 மீட்டர்) சென்ற பிறகு காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மகேஸ்வரன், காரை திடீரென பிரேக் அடித்து நிறுத்தி. காரை பின்னோக்கி இயக்கம் முயன்றுள்ளார்.

​அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த காம்ஃபோர்ட் டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார் ஆம்னி பேருந்து (TN 46 AJ 1759), காரின் (TN 55 Y 3060) பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் காரின் பின்பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது.
​
காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினர்.  அவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அதிகாலையில் மேம்பாலத்தில் நடந்த கோரம்... ஆம்னி பஸ்ஸுக்குள் சென்ற கார்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் 2 பேர் துடிதுடித்து பலி...!

​ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டியன் (வயது 49) தனலட்சுமி (வயது 47)​ மற்றும் பிரவீன் (வயது 09) சிறுவன் ஆகிய 3 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேரில் ​கௌசல்யா (வயது 46) ​வளர்மதி (வயது 45) ​தில்லையம்மாள் (வயது 48) ஆகிய மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

​மேலும், கோகுலவாணி (வயது 13), மணிசர்மா (வயது 16), திருநாவுக்கரசு (வயது 52) மற்றும் கார் ஓட்டுநர் மகேஸ்வரன் ஆகிய 4 பேர் அபாய கட்டத்தைத் தாண்டி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
​
விபத்து குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான வாகனங்களைக் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்தனர்.

​இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்தின் ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அஜித் குமார் (வயது 27) என்பவரைக் கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: குதிரை பேரமா? - உங்க நெஞ்சுல கையை வச்சு சொல்லுங்க... இபிஎஸுக்கு இடியை இறக்கிய செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share