அபுதமமுக..!! எங்க சின்னம் தென்னந்தோப்பு..! புதிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா..!!
கட்சி பெயர் தொடர்பாக புதிய அறிவிப்பை சசிகலா வெளியிட்டுள்ளார்.
சசிகலா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள், அவரது சிறைத் தண்டனை, பின்னர் விடுதலை ஆகியவற்றால் அரசியலில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார். ஆனால், தற்போது மீண்டும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
பிப்ரவரி 24 அன்று, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சசிகலா தனது புதிய கட்சியைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிகழ்ச்சியில், கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட புதிய கட்சிக் கொடியை அவர் அறிமுகம் செய்தார். அந்தக் கொடியின் நடுவில் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
இது திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் அமைந்துள்ளது என்பதை சசிகலா வலியுறுத்தினார். அவர் பேசும்போது, “ஏழை எளிய மக்களுக்காகவும், சாமானியர்களுக்காகவும் செயல்படும் கட்சியாக இது இருக்கும். எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்சி அமையும்” என்று தெரிவித்தார். மேலும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும், மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?
இருப்பினும் சசிகலா கட்சி பெயரை அறிவிக்காமல் இருந்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தொண்டர் ஒருவர் ’அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தொடங்கிய கட்சியில் தான் இணைந்துள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். கட்சியின் சின்னமாக தென்னத்தோப்பு இருக்கும் எனவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!