சவுதியில் இருக்கும் இந்தியர்களுக்கு நிம்மதி! விசா காலம் முடிந்தாலும் அபராதம் இல்லை? நாடு திரும்ப மாற்று வழி என்ன?
இந்தியர்களுக்கு உதவுவதற்காக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகமும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகளைச் செயல்படுத்தி வருகின்றன.
ரியாத்: சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் மற்றும் சுற்றுலா, ஆன்மிகப் பயணங்களுக்குச் சென்றுள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் அண்டை நாடுகளின் விமான நிலையங்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட பலர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
பாதுகாப்பு காரணங்களால் ரியாத் விமான நிலையத்தின் சேவைகள் அக்டோபர் 17-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ஏற்கெனவே பயணத் திட்டங்களைத் தயாரித்திருந்த இந்தியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதையும் படிங்க: சவுதி விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்! இந்தியர் உட்பட 13 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்! இந்தச் சூழலில், சவுதியில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள் கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் விமான நிலையங்கள் வழியாகக் கிடைக்கும் விமானங்களைப் பயன்படுத்தலாம் எனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், அந்த நாடுகளுக்குள் செல்லத் தேவையான விசா மற்றும் நுழைவு விதிமுறைகளை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும். விமான டிக்கெட் கிடைப்பது, விமானம் இயக்கப்படும் நிலை ஆகியவற்றையும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், விமானச் சேவை பாதிப்பால் நாடு திரும்ப முடியாமல் விசா காலத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மிகப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது எனத் தூதரகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சலுகை தொடர்பான நடைமுறைகளைப் பயணிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். இந்தியர்களுக்கு உதவுவதற்காக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகமும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகளைச் செயல்படுத்தி வருகின்றன. அவசர உதவி தேவைப்படுவோர் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம். ரியாத் தூதரகத்தை +966-554412016, +966-542126784 ஆகிய எண்களிலும், கட்டணமில்லா எண் 8002471234 மூலமாகவும் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ்அப் எண் +966-536216082; மின்னஞ்சல் cw.riyadh@mea.gov.in. ஜெட்டா துணைத் தூதரகத்தை +966-12-2614093, +966-556122301 ஆகிய எண்களிலும், வாட்ஸ்அப் +966-536209704 மூலமாகவும் தொடர்புகொள்ளலாம். மின்னஞ்சல் pbskcgi@gmail.com. சவுதியில் உள்ள இந்தியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவசரச் சூழலில் வதந்திகளை நம்பாமல், இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுவது பாதுகாப்பானது. இதையும் படிங்க: சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்?! 12 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் காயம்!