போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா..!! சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கண்காணிப்பு.. மார்ச் 23-க்கு விசாரணை தள்ளிவைப்பு..!!
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது.
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும், காவல்துறை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்பதை வலியுறுத்தி, கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (suo motu) ஒரு பொதுநல வழக்கைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பிரபலமான பரம்வீர் சிங் சைனி வழக்கு உள்ளிட்ட தீர்ப்புகளில், நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதன்படி, அனைத்து காவல் நிலையங்களிலும் நுழைவு வாயில், வெளியேறும் இடங்கள், பிரதான வாயில், லாக்-அப் அறைகள், தாழ்வாரங்கள், லாபி, வரவேற்பு அறை மற்றும் லாக்-அப் அறைகளுக்கு வெளியே உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இவை இரவு நேரத்திலும் தெளிவான ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை உருவாக்க வேண்டும்.
இதையும் படிங்க: இனி 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை!
மேலும், பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு வரை பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதேபோன்று, சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் (ED), தேசிய புலனாய்வு முகமை (NIA) உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களிலும் இத்தகைய கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த உத்தரவுகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது.
ஆனால், பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படாமலோ அல்லது செயல்படாமலோ உள்ளன என்பது தொடர்பான புகார்கள் எழுந்தன. இதனால், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. சமீபத்தில், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன்பு இந்த சுப்ரீம் கோர்ட் suo motu வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தேவ் (அமிகஸ் க்யூரி) ஆஜராகி, “மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், சில மாநிலங்கள் பங்கேற்கவில்லை. இதனால் முன்னேற்றம் தடைபட்டுள்ளது. அடுத்த கூட்டம் மார்ச் 14, 2026 அன்று நடைபெற உள்ளது. அதன் பின்னர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிமன்றம், அனைத்துத் தரப்பினரும் அந்தக் கூட்டத்தில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும், மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் இணைந்து சிசிடிவி அமைப்புகளை தரமாக்குவது, centralized dashboard ஒன்றை உருவாக்குவது போன்றவற்றை விரைவுபடுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்தது.
இறுதியாக, வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 23, 2026 அன்றுக்கு தள்ளிவைத்தது. இந்த வழக்கு, காவல்துறையில் பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்தது. பல ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தொடர் கண்காணிப்பு மூலம் விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்சிஆர்டி பாடப்புத்தக சர்ச்சை... மத்திய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு! உச்சநீதிமன்றம் விசாரணை!