×
 

SC/ST சட்டத்தை தளர்த்த முடியாது... முக்கிய திருப்பம்... வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!!

SC/ST சட்டத் திருத்தத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் 2018 ஆம் ஆண்டு திருத்தத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை அது தள்ளுபடி செய்தது. இந்த திருத்தம் சட்டத்தின் கடுமையான பிரிவுகளை மீண்டும் கொண்டு வந்தது. குறிப்பாக முன்ஜாமீன் வழங்குவதற்கு தடை விதித்தது. மேலும் எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் ஆரம்ப விசாரணை தேவையில்லை என்றும், கைது செய்வதற்கு உயர் அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என்றும் உறுதிப்படுத்தியது.

இந்தச் சட்டம் முதலில் 1989 இல் இயற்றப்பட்டது. சமூகத்தில் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்காகவே அது கொண்டு வரப்பட்டது. சாதி அடிப்படையிலான வன்முறை, அவமானம், சொத்து சேதம் போன்ற குற்றங்களைத் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி வழங்குவதும் அதன் நோக்கம். ஆனால் 2018 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு இந்தச் சட்டத்தின் சில கடுமையான அம்சங்களைத் தளர்த்தியது. முன்ஜாமீன் அளிக்கலாம் என்றும், கைதுக்கு முன் விசாரணை மற்றும் அனுமதி தேவை என்றும் அந்தத் தீர்ப்பு கூறியது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பையும் போராட்டங்களையும் தூண்டியது. பலர் இது சட்டத்தின் நோக்கத்தையே பலவீனப்படுத்துகிறது என வாதிட்டனர்.

இதையடுத்து மத்திய அரசு 2018 ஆகஸ்ட் மாதம் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதில் புதிய பிரிவு 18ஏ சேர்க்கப்பட்டது. இதன் மூலம் முன்ஜாமீன் தடை, எஃப்ஐஆர் பதிவுக்கு முன் விசாரணை தேவையில்லை, கைதுக்கு அனுமதி தேவையில்லை போன்ற அசல் கடுமையான விதிகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டன. இந்தத் திருத்தம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. சமூகத்தில் இன்னும் சாதி அடிப்படையிலான பாகுபாடு தொடர்வதால் இத்தகைய பாதுகாப்பு அவசியம் என்பதே அரசின் நிலைப்பாடு.இந்தத் திருத்தத்தை எதிர்த்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. மனுதாரர்கள் சட்டத்தின் கடுமையான பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது தலைகீழ் பாகுபாட்டிற்கு வழிவகுப்பதாகவும் வாதிட்டனர். குற்றவாளிகள் மீதான தண்டனை விகிதம் குறைவு என்றும், பல தவறான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையும் படிங்க: சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதில் மாற்று நிலம் பெறலாமே! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

மேலும் இழப்பீடு தொகை அதிகமாக வழங்கப்படுவதால் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் கூறினர். அடிப்படை உரிமைகளான சமத்துவம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை இது மீறுவதாக அவர்கள் வாதிட்டனர். ஆனால் 2020 பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் இந்தத் திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை உறுதி செய்தது. அப்போது நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சாரண், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. சட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதே என்றும், அதைத் தளர்த்தக்கூடாது என்றும் அது கூறியது. முன்ஜாமீன் தடை பொதுவாக பொருந்தும் என்றாலும், புகாரில் முதல் பார்வையில் குற்றம் தெரியவில்லை என்றால் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கலாம் என்ற தெளிவுபடுத்தலையும் அது செய்தது. 2019 இல் முந்தைய தளர்த்தும் தீர்ப்பை மறுஆய்வு செய்து ரத்து செய்ததும் இந்த முடிவுக்கு ஆதாரமாக அமைந்தது.சமீபத்தில் மீண்டும் ஒரு மனு தொடரப்பட்டது. அதில் மீண்டும் தவறான பயன்பாடு, தலைகீழ் பாகுபாடு போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஏற்க மறுத்தது. 2020 ஆம் ஆண்டு தீர்ப்பில் ஏற்கனவே இந்தத் திருத்தம் உறுதி செய்யப்பட்டுவிட்டதால் புதியதாக விசாரணை தேவையில்லை என அது தெரிவித்தது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

இதையும் படிங்க: காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share