முதியோர் இல்லத்தை இடிப்பதா? மனசாட்சியே இல்லையா... சீமான் காட்டம்...!
சென்னையில் இயங்கி வரும் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்க திமுக அரசு முயல்வது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயல் என சீமான் தெரிவித்தார்.
சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பந்தாங்கல் பரணிபுதூர் கல்லூரி சாலையில் இயங்கிவரும் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடித்துவிடுவேன் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிரட்டல் விடுக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். அன்பின் திருவுருவம் அன்னை தெரசாவால் தொடங்கி வைக்கப்பட்டுக் கடந்த 35 ஆண்டுகளாக இயங்கிவரும் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தற்போது 400க்கும் முதியோர்கள் பயன்பெற்று வரும் நிலையில், அதனை இடித்துவிடுவேன் என்று திமுக அமைச்சரே நேரில் சென்று மிரட்டல் விடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று கூறினார்.
ஆதரவற்ற முதியோர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து, எவ்வித குறையுமின்றி அரவணைக்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை என்றும் ஆனால், திராவிட மாடல் திமுக அரசு அதனைச் செய்யத்தவறியதோடு, தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் ஆதரவற்ற முதியோர்களை அரவணைக்கும் அரும்பணியையும் முடக்க முயல்வது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்.
கடந்த 35 ஆண்டுகளில் ஏறத்தாழ 10,00க்கும் மேற்பட்ட முதியோர்களை ஆதரித்து அரவணைத்த ‘லிட்டில் டிராப்ஸ்’ முதியோர் இல்லம் நகரின் முதன்மையான இடத்தில் அமைந்திருப்பதால் அதனை எப்படியாவது இடித்துவிட்டு, அவ்விடத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடனேயே இத்தகைய முயற்சிகளில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஈடுபடுவதாக முதியோர் இல்லப் பொறுப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மக்கள் வாழ்வை அழித்து அமைப்பது தொழிற்பேட்டைகளா? கல்லறைகள்… சீமான் விளாசல்…!
ஆகவே, தனியார் கட்டுமான பெருநிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கைவிட்டு, லிட்டில் டிராப்ஸ்ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக செய்வது பச்சை துரோகம்... Group4 மூலம் காலி பணியிடங்களை நிரப்ப சீமான் வலியுறுத்தல்...!