×
 

அம்பேத்கர் சிலை சேதம்..! நிரந்தர பாதுகாப்பு தேவை... செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!!

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டமேதை, சமூகநீதிப் போராளி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டை உடைத்து சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த அம்பேத்கர் அவர்களின் சிலையை அவமதிப்பது வெறும் ஒரு சிலையைச் சேதப்படுத்திய செயலாகக் கருத முடியாது என்றும், அது சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையே அவமதிக்கும் கொடூரமான செயல் என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார். தமிழகத்தில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், இதுபோன்ற செயல்கள் திட்டமிட்டு சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணையை காலதாமதப்படுத்தாமல் விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பாபாசாகிப் அம்பேத்கர் சிலைகள் மற்றும் சமூகத் தலைவர்களின் நினைவுச் சின்னங்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரினார்.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமை.! சகிக்க முடியாத குற்றம்..!! கொந்தளித்த செல்வப் பெருந்தகை..!!

அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், சமூகநீதியின் அடையாளங்களைச் சிதைக்க நினைப்பவர்களின் முயற்சிகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சிதம்பரம் சம்பவத்திற்கு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share