×
 

30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

கேரளத்தில் தனியார் ஹோட்டல் விடுதியில் உள்ள லிஃப்ட்டில் (மின்தூக்கி) காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சிக்கிக் கொண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், கேரளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் லிஃப்ட்டில் சுமார் 30 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு அவரையும், அவருடன் இருந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சசி தரூர் இன்று சென்றிருந்தார். நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலில் லிஃப்ட்டில் மேல்தளத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிஃப்ட் இடைப்பட்ட நிலையில் நின்றுவிட்டது. இதனால் சசி தரூருடன் அவரது ஆதரவாளர்களும் லிஃப்ட்டுக்குள் சிக்கிக் கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஹோட்டல் ஊழியர்கள் முதலில் லிஃப்ட் கதவை திறக்க முயன்றனர். இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தியும் கதவை திறக்க முடியாததால், உடனடியாக கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பை விமர்சிக்கும் காங்.,! பாராட்டும் சசிதரூர்! மீண்டும் புகைச்சல்!

சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஹைட்ராலிக் ஸ்பிரெட்டர் கருவியின் உதவியுடன் லிஃப்ட் கதவை திறந்து, சசி தரூரையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு சசி தரூர் தனது நன்றியை தெரிவித்தார். பின்னர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவிலும், "லிஃப்ட்டில் அரை மணி நேரம் சிக்கியது பெரிய பிரச்சினையாக இல்லை. ஆனால், அதனால் எனது அடுத்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு தாமதம் ஏற்பட்டது. எங்களை தொடர்புகொண்ட சில நிமிடங்களிலேயே விரைந்து வந்து மிகுந்த திறமையுடன் செயல்பட்ட கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்," என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சசி தரூர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இதையும் படிங்க: பர்சனல் செகரட்டரி வேலைக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்... ஆசை வார்த்தையில் சிக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share