போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!
வெளியுறவுத் துறை மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தியதை அமெரிக்காவிடம் மத்தியஸ்தம் செய்யும்படி இந்தியா கோரியதாக அர்த்தம் கிடையாது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தியதை அமெரிக்காவிடம் மத்தியஸ்தம் செய்யும்படி இந்தியா கோரியதாக அர்த்தம் கிடையாது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏன் அறிவித்தார், அமெரிக்காவின் தலையீடு பற்றியும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
"சர்வதேச துாதரக நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுவது போன்ற எதையும் எப்போதுமே நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. உண்மையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமான செயல் ஆகும். போர் பதற்றம் தொடங்கியதுமே இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தீவிரமாக பேசி வந்தனர். மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் பேசப்பட்டது. அதையெல்லாம் மத்தியஸ்தம் செய்வதற்கான கோரிக்கையாக கருத முடியாது. நாடுகளுக்கு இடையேயான துாதரக தொடர்புகள் என்பது ஒருபோதும் மத்தியஸ்தம் வேண்டுகோள் கிடையாது. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இருவரும் பேசினார்கள்.
பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ரூபியோ பேசினார். மோதல் நடந்த அனைத்து நாட்களிலும் இது திரும்பத் திரும்பத் தொடர்ந்து கொண்டிருந்தது.
அதற்காக, அமெரிக்காவிடம் மத்தியஸ்தம் செய்யும்படி இந்தியா கோரியதாக அர்த்தம் கிடையாது. நம்முடைய நாடு எப்போதுமே நீண்ட கால போரை விரும்பவில்லை. பயங்கரவாதிகளுக்குப் பாடம் கற்பிக்க மட்டுமே விரும்பியது. அதன்படி பாடம் கற்பிக்கப்பட்டு விட்டது." என்று சசி தரூர் கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.பி.,யான சசி தரூர், இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!
இதையும் படிங்க: தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!