வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!
வங்கதேச தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதால் நடு நிலையான ஒரு அரசின் கீழ் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேசத்தில் பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் தேர்தலை "திட்டமிட்ட ஏமாற்று மற்றும் கேலிக்கூத்து" என்று அழைத்த அவர், மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்காதது என்றும், ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனா, தனது அறிக்கையில் பல்வேறு முறைகேடுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: "பிப்ரவரி 12 அன்று வங்கதேசம் ஒரு திட்டமிட்ட ஏமாற்று தேர்தலை கண்டது. இது மக்களின் வாக்குரிமையை மதிக்காத கேலிக்கூத்து. தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஓட்டு பதிவு சதவீதங்கள் நம்ப முடியாதவை. 60 சதவீத ஓட்டு பதிவு என்ற கூற்று நகைப்புக்குரியது.
வாக்குச் சாவடிகள் வெறிச்சோடி கிடந்தன. பல இடங்களில் வாக்காளர்கள் வரும் முன்பே ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன. வன்முறை, சாவடி கைப்பற்றல், முன்கூட்டியே முத்திரை இடுதல் போன்ற புகார்கள் எழுந்தன."
இதையும் படிங்க: வங்கதேச பொதுத்தேர்தல்!! ஆட்சி, அதிகாரம் யாருக்கு? தொடங்கியது வாக்குப்பதிவு!
அவாமி லீக் கட்சியை தடை செய்து, தேர்தலை நடத்திய முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை "சட்டவிரோதம்" என்று குற்றம்சாட்டியுள்ளார் ஹசீனா. "யூனுஸ் நிர்வாகம் முறைகேடுகள் மூலம் ஓட்டு எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. இது ஜனநாயகத்தை மீட்டெடுக்கவில்லை, மக்களின் அவநம்பிக்கையை ஆழப்படுத்தியுள்ளது" என அவர் தெரிவித்தார்.
இதனால், யூனுஸ் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும், அவாமி லீக் தலைவர்கள் மீதான பொய் வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். மிக முக்கியமாக, நடுநிலையான தற்காலிக அரசின் கீழ் சுதந்திரமான, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஷேக் ஹசீனா.
இந்தத் தேர்தலில் பாங்க்ளாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி (BNP) பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹசீனாவின் இந்த கண்டனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவாமி லீக் பங்கேற்காததால் பலர் வாக்களிக்கவில்லை என்பதும், தேர்தல் புறக்கணிப்பு வெற்றி பெற்றது என்பதும் அவரது கூற்று. வங்கதேச அரசியல் எதிர்காலம் எப்படி அமையும் என்பது இப்போது பெரும் கேள்வியாக உள்ளது. ஜனநாயகத்தின் பெயரால் நடந்த இந்த சம்பவங்கள் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!