50 சதவீத மக்கள் அதிருப்தி!! அப்செட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு!! அதிகாரிகள் மெத்தனம்!
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களிடம் நல்ல பெயர் எடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இருப்பினும், சமீபத்தில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் மாநாட்டில் அரசு நிர்வாகத்தின் மீது பொதுமக்களிடம் கடும் அதிருப்தி நிலவுவதாக முதல்வரே அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு, "அரசு நிர்வாகத்தின் மீது 51 சதவீத மக்கள் மட்டுமே திருப்தி அடைந்துள்ளனர். மொத்தம் 21 எம்பிக்களில் வெறும் 5 பேரின் செயல்பாடுகளுக்கு மட்டுமே மக்களின் ஆதரவு உள்ளது. அதுவும் 50 சதவீதம் தான்" என்று கூறினார்.
நில பிரச்னைகள், வடிகால் திட்டங்கள், ஊரக குடிநீர் வினியோகம், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளில் அரசு மெத்தனமாக இருப்பதால் இந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு துறைகளை கண்காணிக்க கார்ப்பரேட் நிபுணர்கள்! ஆந்திர முதல்வர் சந்திரபாபு பலே ஐடியா!
முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும் முதலீடுகளை ஈர்த்து புதிய தொழில்களை தொடங்கி வருகின்றனர். ஆனால், சாமானிய மக்கள் இதை வியப்புடன் பார்க்கவில்லை. அரசிடம் இருந்து தனிப்பட்ட நன்மை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்று தெலுங்கு தேசத்தின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அரசியல் விமர்சகர் நாகேஸ்வர் கூறுகையில், "வருமானத்தை பெருக்குவோம் என்று உறுதியளித்த சந்திரபாபு நாயுடு, கடனை அதிகரித்துவிட்டார். மீளா கடன் சுமையால் அரசு தவிக்கிறது. நலத்திட்டங்கள் மற்றும் அன்றாட செலவுகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
கடன் சுமை அதிகரித்ததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதற்கே போராட வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வருவாய் - செலவு இடைவெளி 34 சதவீதமாக உள்ளது. நிதியாண்டு இறுதிக்குள் 140 சதவீதமாக உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் நெருக்கம் இருப்பதால் வரம்பு மீறி கடன் வாங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமராவதி தலைநகருக்கு மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் கடன் ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு கடனுக்கு பதிலாக மானியங்கள் வழங்கினால் மட்டுமே நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும். இல்லையெனில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் போல கடும் நிதி நெருக்கடி ஏற்படும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலை ஆட்சியின் எதிர்காலத்தை பாதிக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: பேப்பரை எழுதி கொடுத்ததையே தப்பா படிக்கும் விஜய்!! வச்சு செய்யும் தி.மு.க., ஐ.டி.,அணி!! சத்யராஜ் மகள் கிண்டல்!