×
 

நரவனேவின் சர்ச்சை புத்தகம்!! வெளிநாடுகளில் விற்பனை ஜரூர்! ஆன்லைனில் கசிந்ததால் டெல்லி போலீஸ் தீவிரம்!

அதிகாரப்பூர்வமாக வெளியாக புத்தகம் பற்றி, பட்ஜெட் கூட்டத் தொடர் விவாதத்தில் ராகுல் பேசியது, பார்லிமென்ட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே எழுதிய 'Four Stars of Destiny' என்ற சுயசரிதை புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2019 முதல் 2022 வரை ராணுவ தலைமை தளபதியாக பணியாற்றிய அவர், பணி ஓய்வுக்குப் பின் இந்த புத்தகத்தை எழுதினார். 2020இல் இந்தியா-சீனா எல்லை பதற்றம் குறித்து மத்திய அரசின் செயல்பாடுகளை இதில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் வெளியிட திட்டமிட்ட இந்த புத்தகத்துக்கு ராணுவ அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால், இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ஆனால் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத்தில் இந்த புத்தகத்தின் நகலை எடுத்து வந்து சில வரிகளை வாசித்தார். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான விஷயங்கள் அதில் உள்ளதாக கூறி, பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதித்தார். இது பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இந்த ஒரு தகுதி இருந்தால் போதும்... விடுபட்ட மகளிருக்கு உடனே உரிமைத் தொகை கிடைக்கும்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

இதனால் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். புத்தகத்தின் ப்ரீ-பிரிண்ட் PDF வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில், அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த நகல்களில் 13 இலக்க ISBN எண் இருப்பதால், வெளியீட்டுக்கு தயாரான புத்தகம் என உறுதியாகியுள்ளது.

ராணுவ அமைச்சக அனுமதி இல்லாமல் இந்திய ராணுவம் பற்றிய தகவல்கள் கொண்ட புத்தகம் வெளிநாடுகளில் விற்பனை ஆவது எப்படி என்பதை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். சர்வதேச நிதி பரிவர்த்தனை மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்பாளர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்படுகின்றன. குற்றச்சாட்டு சதி (criminal conspiracy) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

பதிப்பகம் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, புத்தகம் வெளியாகவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. எந்த வடிவிலும் (பிரிண்ட் அல்லது டிஜிட்டல்) பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என கூறியுள்ளது. ஜெனரல் நரவனேவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் காட்டியது உண்மையான நகல் என்பதால், கசிவு எப்படி நடந்தது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு, ராணுவ ரகசியங்கள், அரசியல் பயன்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... கைதி அருளுக்கு இடைக்கால ஜாமின்..! ஹைகோர்ட் நிபந்தனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share