நேரு மீது ராஜ்நாத் சிங் சுமத்திய குற்றச்சாட்டு!! பாஜக மீது பிரியங்க காந்தி பாய்ச்சல்!
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துகள், மக்கள் பிரச்னைகளை திசைதிருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள சாத்லி கிராமத்தில் நேற்று (டிசம்பர் 2) சர்தார் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் பிரம்மாண்ட ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் வெடித்த பேச்சு தான் இப்போது தேசிய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
மேடையில் பேசிய ராஜ்நாத் சிங், “நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள், மக்களின் பணத்தில் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்ட விரும்பினார். ஆனால் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல் அதற்கு ஒருபோதும் அனுமதி கொடுக்கவில்லை. சர்தாரின் உறுதியான நிலைப்பாட்டால்தான் அது நடக்காமல் போய்விட்டது” என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.
இந்தக் கருத்து வெளியான சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி முழுவதும் கொந்தளிப்பில் இறங்கியது. காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மிக முக்கிய முகமுமான பிரியங்கா காந்தி வதேரா உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை பொளந்துகட்டிய பிரமோஸ்!! இந்தோனேசியாவுடன் ராஜ்நாத் சிங் டீலீங்! கூடுது மவுசு!
“இது வெறும் திசைதிருப்பும் தந்திரம். மக்களை ஏமாற்றுவதற்காக இறந்து 60 ஆண்டுகளாகிவிட்ட தலைவர்களை அவமதிக்கிறார்கள். இன்றைக்கு நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகள் ஏராளம் – வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, தில்லியில் மூச்சுத் திணறடிக்கும் காற்று மாசு… இவை எல்லாவற்றையும் மறைப்பதற்காகவே இப்படிப்பட்ட பொய்களைப் பரப்புகிறார்கள்” என்று பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடினார்.
டெல்லி காற்று மாசு குறித்து மேலும் பேசிய அவர், “இது அரசியல் செய்ய வேண்டிய பிரச்னை இல்லை. ஆம் ஆத்மி ஆட்சியாகட்டும், மத்திய அரசாகட்டும், அண்டை மாநில அரசுகளாகட்டும் – அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து தீர்வு காண வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுபற்றி உடனடியாக விவாதம் நடத்தி நிரந்தரத் தீர்வு கொண்டு வர வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்” என்று வலியுறுத்தினார்.
ராஜ்நாத் சிங்கின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து மட்டுமல்ல, சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், இடது கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. “வரலாற்றைத் திரித்துப் பேசுவது பாஜகவின் பழைய பழக்கம்” என்று அவர்கள் ஒரே குரலில் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், ராஜ்நாத் சிங் தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்போ விளக்கமோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக தலைவர்களை புகழ்ந்து தள்ளும் சசிதரூர்!! கடும் புகைச்சலில் காங்,., தலைவர்கள்!